Published : 09 May 2016 02:09 PM
Last Updated : 09 May 2016 02:09 PM
தியாகராய நகர் தொகுதியில் அதிமுக எதிர்ப்பலை வலுவாக இருப்பதை உணர்வதாகக் கூறுகிறார் அத்தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர்.கனிமொழி.
சென்னை தியாகராய நகர் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் என்.வி.என். சோமுவின் மகள் டாக்டர் கனிமொழி போட்டியிடுகிறார். அவர் தி இந்து (தமிழ்) நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:
உங்கள் தொகுதியில் பிரச்சாரம் எப்படி இருக்கிறது?
தியாகராய நகரில் முழு வீச்சில் பிரச்சாரம் செய்து வருகிறேன். இந்தத் தொகுதியில் படித்த வாக்காளர்கள் அதிகம். கணிசமான அளவில் குடிசைவாழ் மக்களும் இருக்கின்றனர். அனைத்து பகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன். இத்தனை நாள் பிரச்சாரத்தில் தியாகராய நகர் தொகுதியில் அதிமுக எதிர்ப்பலை வலுவாக இருப்பதை உணர்கிறேன்.
கடந்த 2006, 2011 என இரு தேர்தல்களில் தொடர்ந்து அதிமுக வென்ற தொகுதி தி.நகர் தொகுதி. ஆனால், இந்த தொகுதிக்காக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குறிப்பிடத்தக்க எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டு.
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலங்களைத் தவிர புதிதாக ஒன்றும் கட்டப்படவில்லை. போக்குரவரத்து நெரிசலை சீர்படுத்தவும் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் குறை கூறுகின்றனர்.
அதேபோல் குடிசைவாழ் மக்களும் அதிமுக அரசு மீது அடுக்கடுக்காக புகார் கூறுகின்றனர். தியாகராய நகரை பொறுத்தவரை அதிமுக எதிர்ப்பு அலை பலமாக இருக்கிறது.
தி.நகர் தொகுதிக்காக நீங்கள் முன்வைக்கும் பிரத்யேக திட்டங்கள்..?
தியாகராய நகர் என்றவுடனேயே நமக்கு நினைவுக்கு வருவது சிறு வணிகர்கள்தான். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது நமக்கு நாமே பிரச்சாரத்தை தி.நகர் சிறு வணிகர்களுடன்தான் முடித்தார். சிறு வணிகர்களுக்கு என கட்டிக்கொடுக்கப்பட்ட வளாகம் சரியான பராமரிப்பு இல்லாததால் அவர்களில் பலர் மீண்டும் தெருவோரங்களுக்கு கடைகளை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால், சிறு வணிகர்களுக்கும் பாதிப்பு தி.நகர் வாசிகளுக்கும் பாதிப்பு. எனவே சிறு வணிகர்கள் தொழில் சிறக்க ஏற்கெனவே மு.க.ஸ்டாலின் உறுதியளித்தபடி சிறப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
அதேபோல், தி.நகர் வாசிகள் பாதிக்கப்படாத வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்படும். போக்குவரத்து இடையூறை சமாளிக்க மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கப்படும். தியாகராய நகரில் சுத்தமான குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும். கழிவு நீர் குழாய்கள் சீரமைக்கப்படும். அப்பகுதி மக்களின் முக்கிய எதிர்பார்ப்பான சீரான மின் விநியோகம் உறுதிப்படுத்தப்படும். அன்றாடம் குவியும் குப்பைகள் தேங்காமல் அகற்றப்படும்.
கடந்த 10 ஆண்டுகளாக தி.நகர் பகுதியில் பெருமளவில் சி.எம்.டி.ஏ. விதிமுறை மீறல்கள் நடைபெற்றிருக்கின்றன. திமுக ஆட்சி அமைந்த பிறகு அத்தகைய விதிமுறை மீறல்கள் கண்காணிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சுத்தமான, பசுமையான (க்ளீன் அண்ட் கிரீன்) தி.நகர் என்பதுதான் எனது முக்கிய இலக்கு. திமுக ஆட்சி அமைந்ததும் அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்.
உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
வெற்றி வாய்ப்பு மிக மிக பிரகாசமாக இருக்கிறது. கடந்த முறை மாதவரம் தொகுதியில் போட்டியிட்டேன். இந்த முறை தியாகராய தொகுதியில் போட்டியிடுகிறேன். தொகுதி மாற்றம் எனக்கு சிறப்பானதாக அமைந்திருக்கிறது. ஒரு பெண் வேட்பாளர் என்பதால் பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருக்கிறது. தி.நகரில் எந்த பகுதியில் பிரச்சாரத்துக்கு சென்றாலும் பெண்கள் என்னை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். மருத்துவரான நான் ஏற்கெனவே பொது சேவையில் இருப்பதால் மக்கள் என் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர்.
தி.நகரில் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும்தான் நேரடி போட்டி எனக் கூறுப்படுகிறதே?
தி.நகரில் போட்டியிடும் கட்சிகளில் தேமுதிக, பாமக வேட்பாளர்களுக்கு என்ன மாதிரியான வரவேற்பு இருக்கிறது என்பதை நான் சொல்லத் தேவையில்லை.
அதிமுக வேட்பாளர் சத்திநாராயணன் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். மாநகராட்சி கவுன்சிலராக இருக்கும் அவர் தனது சொந்த வார்டு பக்கம்கூட எட்டிப் பார்ப்பதில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர் மக்கள். வார்டு மக்களைக் கூட திருப்திப்படுத்த முடியாத ஒருவர் எப்படி ஒட்டுமொத்த தொகுதியையும் கைப்பற்ற முடியும்?
பாஜகவை எடுத்துக் கொண்டால், தமிழகத்தில் அவர்களுக்கு இருக்கும் வாக்கு வங்கி மிகக் குறைவானதே. எனவே அந்த அடிப்படையில் தி.நகரில் அவர்களுக்கு வெற்றி பெற வாய்ப்பில்லை. இரண்டாவதாக பிராமண சமுதாயத்தினர் அதிகம் உள்ள தொகுதி என்பதால் பாஜக தி.நகரை தீவிரமாக குறிவைப்பதாக கூறப்படுகிறது. ஆனால், நாங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து வாக்கு சேகரிக்கவில்லை. வணிகர்கள், நடுத்தர மக்கள், அடித்தட்டு மக்கள் என அனைத்து தரப்பினரிடையேயும் வாக்கு கோரி வருகிறோம்.
தி.நகருக்கான திமுகவின் எதிர்கால திட்டங்கள் படித்தவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதேபோல் பூரண மதுவிலக்கே முதல் கையெழுத்து என்ற எங்கள் பிரச்சாரம் அடித்தட்டு மக்களிடம் எங்களை மிக எளிதாக கொண்டு சேர்த்துள்ளது. எனவே, இந்த முறை தி.நகர். திமுகவுக்கே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT