Published : 20 May 2016 11:43 AM
Last Updated : 20 May 2016 11:43 AM
திமுக கோட்டையான குன்னூர் சட்டப்பேரவை தொகுதியை 25 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிமுக கைப்பற்றியது. சுயேச்சை மற்றும் நோட்டாவுக்கான வாக்குகள் திமுக வெற்றிக்கு வேட்டு வைத்துவிட்டன.
நீலகிரி மாவட்டம் குன்னூர் தொகுதி திமுகவின் கோட்டையாக இருந்தது. கடந்த 1957-ம் ஆண்டு தேர்தல் மற்றும் 62-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
பின்னர், 1967-ம் ஆண்டு திமுக முதன்முறையாக குன்னூர் தொகுதியை கைப்பற்றியது.
1984-ம் ஆண்டு முதன்முறையாக அதிமுக குன்னூரில் வெற்றி பெற்றது. மீண்டும் 1989-ம் ஆண்டு திமுக வெற்றி பெற்றது. 1991-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ராஜீவ்காந்தி கொலையால் ஏற்பட்ட அனுதாபத்தில் அதிமுக வெற்றி பெற்றது.
பின்னர், 1996 மற்றும் 97-ம் தேர்தல்களில் திமுக மீண்டும் வெற்றி பெற்றது. 2001-ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி பெற்றது. 2006 மற்றும் 2011 தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றது. தற்போதைய தேர்தலில் அதிமுகவிடம் திமுக நூலிழையில் வீழ்ந்துள்ளது.
மாவட்டச் செயலாளர் தோல்வி
அதிமுகவுக்கு எதிரான அலையிலேயே கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் குன்னூர் மற்றும் கூடலூர் தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.
நடப்பாண்டு மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் என்ற மன நிலையிலேயே திமுகவினர் இருந்தனர்.
இதன் காரணமாக நீலகிரி திமுக மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக் நம்பிக்கையில் களமிறங்கினார்.
இதனால், எம்எல்ஏவாக இருந்த கா.ராமசந்திரன் ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். பின்னர் மு.க.ஸ்டாலின் குன்னூர் வந்த பின்னர் இரு தரப்பினரும் சமாதானமாயினர்.
3710 வாக்குகள்
இந்நிலையில், இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் பா.மு.முபாரக் 3710 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சாந்தி ஏ.ராமுவிடம் தோல்வியுற்றார்.
தேமுதிக மாவட்டச் செயலாளராக இருந்த ஏ.சாந்தி, கடந்த 2014-ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார்.
அவருக்கு சீட் அறிவிக்கப்பட்டதால் குன்னூர், கோத்தகிரி ஒன்றிய நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்தனர். அது வாக்கு எண்ணிக்கையின்போது எதிரொலித்தது.
குன்னூரில் மக்களிடம் நன்கு அறிமுகமான டிஎஸ்பியாக இருந்து ஓய்வு பெற்ற தர்மராஜ் சுயேச்சையாக போட்டியிட்டு 2319 வாக்குகளும், நோட்டாவுக்கு 2283 வாக்குகளும் கிடைத்தன. இந்த வாக்குகளால் பா.மு.முபாரக் நூலிழையில் வெற்றியை தவற விட்டார்.
கா.ராமசந்திரன் ஆதரவாளர்கள் முழுமையாக களப்பணியாற்றாததால் கோத்தகிரி பகுதியில் திமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டு, வெற்றி வாய்ப்பு பறிபோய்விட்டதாக கட்சியினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT