Published : 28 May 2022 06:31 AM
Last Updated : 28 May 2022 06:31 AM

பாம்பன் பால கடலில் ஆபத்தான படகு சவாரி: படகு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

பாம்பன் பால கடலில் ஆபத்தான படகு சவாரி மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள்.

ராமேசுவரம்: பாம்பன் பால கடல் பகுதியில் அனுமதியின்றி சட்டத்துக்குப் புறம்பாக படகு சவாரி நடத்துவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி அதன் கடற்கரை உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களைக் கண்டு மகிழ ஆண்டுதோறும் ஏறத்தாழ இரண்டு கோடி சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு சுற்றுலா வரும் பெரும்பாலானோர் கடலில் படகு சவாரி செல்வதற்கு விரும்புகின்றனர்.

ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையிலிருந்து கோதண்டராமர் கோயில் வரையிலுமான 6 கி.மீ தொலைவிலான தனியார் படகு சவாரிக்கு நபர் ஒன்றுக்கு ரூ.100 கட்டணமும், அரசால் வனத்துறை மூலம் குந்துக்கால் இறங்குதளத்திலிருந்து குருசடை தீவில் உள்ள படகு இறங்கு தளம் வரையிலுமான 1 கி.மீ-க்கும் குறைவான தொலைவுக்கு ரூ. 300ம் வசூலிக்கப்படுகிறது. இதில் வனத்துறை படகு சவாரி தொகை அதிகம் உள்ளதால் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவதில்லை.

அதே சமயம் மீனவர்கள் சிலர் தங்களின் படகுகளில் ஒரு குடும்பத்துக்கு 2 முதல் 3 ஆயிரம் வரை வசூலித்து, உயிர் காக்கும் உடை, பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி நாட்டுப்படகு மற்றும் பைபர் படகில் 10-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு பாம்பன் பால கடல் பகுதியில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.

பாம்பன் பால கடற்பகுதி பெரிய அலைகள், அதிக நீரோட்டம், வேகமான காற்று மற்றும் பாறைகள் மீது மோதும் அபாயங்களுக்கு அதிக வாய்ப்புள்ளவை ஆகும். இதுபோன்ற ஆபத்தான, அனுமதிக்கப்படாத சுற்றுலா படகு சவாரியைத் தடுக்காமல் மரைன் போலீஸார் மவுனம் காக்கின்றனர்.

பாம்பன் கடலில் சட்டத்துக்குப் புறம்பாக படகு சவாரி நடத்தும் படகின் உரிமையாளர்கள் மீது மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், தன்னார்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x