Published : 27 May 2022 06:18 AM
Last Updated : 27 May 2022 06:18 AM
திருப்பூர்: கீழ்பவானி பாசன கால்வாயை நவீனப்படுத்த கான்கிரீட் அமைப்பதற்காக இரு கரைகளிலும் உள்ள மரங்களை வெட்டுவதற்கான கணக்கெடுப்பால் அதிருப்தியடைந்துள்ள விவசாயிகள், திட்டத்தை முழுவதுமாக கைவிட நீர்வளத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய 3 மாவட்ட விவசாயிகளுக்கும், லட்சக்கணக்கான விவசாய நிலங்களுக்கும் உயிர்நாடியாக இருப்பது கீழ்பவானி பாசன திட்டம். தற்போது வரை ஆண்டுதோறும் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயனடைந்து வருகிறது. தமிழக கால்வாய் பாசனத்தில், அதிக பாசன பரப்பளவு கொண்ட திட்டம் கீழ்பவானி பாசன கால்வாய் திட்டம்தான்.
இந்நிலையில், கால்வாயை நவீனப்படுத்தும் விதமாக பிரதான மற்றும் கிளை கால்வாய்களில் கான்கிரீட் தளம் அமைப்பது, பக்கவாட்டு பகுதிகளில் கான்கிரீட் சாய்வுதளம் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களை அரசு வகுத்துள்ளது. இத்திட்டம் நிறைவேறினால் முற்றிலுமாக விவசாயம் பாதிக்கப்படும் என்கின்றனர் விவசாயிகள்.
இத்திட்டத்தை கைவிடுவதுடன், மரங்கள் வெட்டுவதற்கும்எதிர்ப்பு தெரிவித்து, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனை விவசாயிகள் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
விவசாயம் பாதிக்கப்படும்
இதுதொடர்பாக கீழ்பவானி பாசன இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மு.ரவி கூறும்போது, "மண் கால்வாயாக இருப்பதால் தண்ணீர் செல்லும்போது கசிவு நீர் மூலமாகவும், நிலத்தடி நீர் மூலமாகவும் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். கால்வாயின் இரு பகுதிகளிலும் லட்சக்கணக்கான பழமை வாய்ந்த மரங்கள் உள்ளன. பக்கவாட்டில் கான்கிரீட் சாய்வுதளம் அமைக்கப்படும் பட்சத்தில், மரங்கள் அனைத்தும் வெட்டப்படும் சூழல் உருவாகும்.
இதனால், கீழ்பவானி பாசன கால்வாயின் மூலமாக ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய 3 மாவட்டங்களில் நேரடியாக 163 வருவாய் கிராமங்களின் நிலத்தடி நீர் உள்ளிட்டவை பாதிக்கப்படும். கிராமங்களின் குடிநீர் தேவையும், நிலத்தடி நீர்மட்டம் மற்றும் கசிவுநீர் மூலம் பெறப்படும் விளைநில பாசனமும் பாதிக்கப்படும்" என்றார்.
பல்லுயிர் சூழலுக்கு ஆபத்து
நத்தக்காடையூர் ஊராட்சி மன்றத் தலைவர் ந.செந்தில்குமார் கூறும்போது, "50 ஆண்டுகளாக கால்வாய் தூர்வாரப்படாமல் இருப்பதால் கடைமடைக்கு தண்ணீர் செல்லவில்லை.
தூர்வாரினாலே கடைமடைவரை தண்ணீர் செல்லும். கான்கிரீட் அமைப்பதால் பல்லுயிர் சூழல் பாதிக்கப்படும். தூர்வாரிய பின்பு, கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லையென்றால், அதன்பின்னர் கான்கிரீட் போட்டுக்கொள்ளட்டும் என கூறியுள்ளோம். எனவே, கீழ்பவானி பாசனக் கால்வாயின் பசுமைச்சூழலை கெடுக்கக்கூடாது. கால்வாய் இருக்கும் இடங்களில் மரங்களை வெட்டுவதால், பசுமைப்பரப்பு குறைந்து பாலைவனமாகும். தற்போது மரங்களை வெட்டுவதற்கு கணக்கெடுப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது.
பாளையம் முதல் மங்களப்பட்டி வரை கீழ்பவானி வாய்க்காலில் இரு கரையிலும் உள்ள மரங்களைவெட்ட எண்கள் போடப்பட்டுள்ளன. இது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்கிரீட் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இதுதொடர்பாக சென்னையில்கடந்த 25-ம் தேதி தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் முறையிட்டுள்ளோம் "என்றார்.
தூர்வாரினாலே போதும்
கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் செ.நல்லசாமி கூறும்போது, "1956-ம் ஆண்டுக்குப்பிறகு கால்வாய் தூர்வாரப்படவில்லை, கரைகள் வலுப்படுத்தப்படவில்லை, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகளும், பொதுமக்களும் வேண்டாத பொருட்களை கொட்டும்குப்பைத்தொட்டியாக கால்வாய் பயன்படுத்தப்படுவது வேதனை அளிக்கிறது.
கான்கிரீட் கால்வாயாக மாற்றினால் உரிய நீரை உரிய நேரத்தில் கொடுக்க முடியும் என்பது ஏற்புடையதல்ல. கால்வாய் தூர்வாரப்பட்டு, கரைகளை பலப்படுத்தினாலே கடைக்கோடி வரை உரிய நேரத்தில் நீரை எளிதாக வழங்க முடியும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT