Last Updated : 13 May, 2016 05:29 PM

 

Published : 13 May 2016 05:29 PM
Last Updated : 13 May 2016 05:29 PM

விளாத்திகுளத்தில் அதிமுக, திமுக, தமாகா இடையே கடும் போட்டி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக, திமுக, தமாகா இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. மூன்று வேட்பாளர்களில் முந்தப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு தொகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பின்தங்கிய தொகுதியாக விளாத்திகுளம் விளங்குகிறது. வானம் பார்த்த மானாவரி விவசாயத்தை நம்பியே மக்களின் வாழ்வாதாரம் அமைந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக மீன்பிடித் தொழிலும் கணிசமானோர் ஈடுபட்டுள்ளனர்.

தொகுதிக்குள் 40 கி.மீ. தொலைவுக்கு வைப்பாறு செல்வதால் ஆற்று மணலும், கடற்கரை பகுதிகள் இருப்பதால் தாது மணலும் கொள்ளை அடிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.

இந்த தேர்தலில் அதிமுக சார்பில் கு. உமாமகேஸ்வரி போட்டியிடுகிறார். இவர், கடந்த 2011-ம் ஆண்டு முதல் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக இருந்து வந்துள்ளார்.

ஆளும் கட்சி பலம், தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர், விளாத்திகுளம் தொகுதி என்றுமே அதிமுகவின் கோட்டை (இதுவரை 7 முறை வெற்றி), தொகுதியின் பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆகியவை உமா மகேஸ்வரிக்கு வலுசேர்க்கின்றன.

வளர்ச்சித் திட்டங்கள் இல்லை

அதேநேரத்தில் பெண் வேட்பாளர் என்பதால் கட்சியினரிடையே தகவல் தொடர்பில் பின்னடைவும், அரசியல் அனுபவம் இல்லாதவர் என்பதால் தேர்தல் உத்திகளை செயல்படுத்துவதில் தடுமாற்றமும் அவரது பலவீனமாக வெளிப்படுகின்றன.

கடந்த 15 ஆண்டுகளாக இந்த தொகுதி அதிமுக வசம் இருந்த போதிலும் தொகுதியில் பெரிய அளவில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் ஒங்கி ஒலிப்பது உமாமகேஸ்வரிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

திமுக வேட்பாளர்

திமுக சார்பில் சு. பீமராஜ் போட்டியிடுகிறார். இவரும் புதுமுக வேட்பாளர் தான். பாரம்பரியமிக்க திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். புதூர் ஒன்றியத்தின் முன்னாள் திமுக செயலாளராக இருந்தவர், காங்கிரஸ், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் கூட்டணி இவருக்கு சாதகமான அம்சங்களாக உள்ளன.

அதேநேரத்தில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஒத்துழைப்பு இல்லாமை, தொகுதி மக்கள் மத்தியில் பெரிய அளவில் பரிச்சயம் இல்லாதவர் ஆகியவை அவருக்கு எதிரான அம்சங்களாக அமைந்துள்ளன.

40 ஆண்டு அனுபவம்

தேமுதிக, தமாகா, மக்கள் நலக்கூட்டணி சார்பில் தமாகா வேட்பாளராக பெ. கதிர்வேல் போட்டியிடுகிறார்.

கடந்த காலங்களில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் மாவட்ட தலைவர், ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தில் மாநிலச் செயலாளர், தூத்துக்குடி துறைமுக சபை உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். தற்போது தமாகாவின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக இருக்கிறார். 40 ஆண்டு கால அரசியல் அனுபவம், கூட்டணி பலம் ஆகியவை அவருக்கு வலுசேர்க்கும் விஷயங்களாக உள்ளன.

அதேநேரத்தில் தமாகாவின் சின்னம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாகாதது, தொகுதியில் தமாகா கட்சி அமைப்பு ரீதியாக முழுமையாக இல்லாதது, பணம் செலவழிப்பதில் சிக்கனம் போன்றவை இவருக்கு பலவீனமாக அமைந்துள்ளன.

இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் போ. இராமமூர்த்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் க.நா. மருதநாயகம், பாமக சார்பில் போட்டியிடும் ச. முனியசாமி ஆகியோர் பெரிய அளவில் வாக்குகளை பிரிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.

எனவே, விளாத்திகுளம் தொகுதியில் 14 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் அதிமுக, திமுக, தமாகா வேட்பாளர்களுக்கு இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. இதில் வெல்லப் போவது யார் என்பதை அறிய நாம் இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x