Published : 12 May 2016 09:23 AM
Last Updated : 12 May 2016 09:23 AM
அதிமுக முதன்முதலில் சந்தித்த திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மாயத்தேவர். 1977-ல் மீண்டும் அதிமுக வேட்பாளராகவும் அடுத்த தேர்தலில் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்ட மாயத்தேவரை, இப் போது இரண்டு கட்சிகளுமே கண்டு கொள்ளவில்லை. அவர் தனது தேர்தல் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
‘‘காளிமுத்துவும், எஸ்.டி.சோம சுந்தரமும் எனக்கு சீட் கொடுக்கக் கூடாது; சேடபட்டி முத்தையாவுக்குத் தான் கொடுக்கணும்னு சொன் னாங்க. அதை எல்லாம் கேக்காம, எனக்கே சீட் குடுத்த எம்.ஜி.ஆர், ‘எம்புட்டுய்யா செலவு பண்ண முடியும்?’னு கேட்டார். ‘நான் வெறும் ஆளா இருக்கேன் தலைவரே.. காட்டுலருந்து (விவசாயம்) வந்த காசு எங்க மாமியார்கிட்ட கொஞ்சம் இருக்கு. அத வச்சுத்தான் சமாளிக்கணும்’னு சொன்னேன்.
அதுபடியே எங்க மாமியார் வேலாயுதம் அம்மாள் அம்பதாயிரத்தத் தூக்கிக் கொடுத்தாங்க. அப்ப என்கிட்ட சொந்தமா கார்கூட இல்ல. எம்பி ஆகி 7 வருசம் கழிச்சுத்தான் ஒரு பழைய அம்பாசிட்டர் காரையே வாங்க முடிஞ்சுது. பிரச்சாரத்துக்கு வாடகைக்குத்தான் காரு எடுத்துட்டுப் போவோம். சில நேரங்கள்ல நடந்துகூட போயிருக்கேன்.
அப்படி ஒரு தடவ போயிருந்தப்ப நல்லா மழை. வேட்டி சட்டை எல்லாம் தொப்பலா நனைஞ்சிருச்சு. மாத்துத் துணி இல்லாததால் கட்சித் துண்டை இடுப்புல கட்டிக்கிட்டு ஓட்டுக் கேட்டுப் போனது இன்னமும் ஞாபகம் இருக்கு. ஆளும் திமுககாரங்க ஓட்டுக்கு காசு குடுக்குறதா சொன்னாங்க. ‘காசை வாங்கிக்கிட்டு இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்க’ன்னு பிரச்சாரம் செஞ்ச எம்.ஜி.ஆர்., எனக்காக தன்னோட சொந்தப் பணத்த செலவு செஞ்சாரு.
கனியம்மாள்னு ஒரு அம்மா, எம்.ஜி.ஆருனா உசுர விடும். எங்க வீட்டுக்குக்கூட வராத எம்.ஜி.ஆர்., தேர்தல் பிரச்சாரத்துல ஒரு நாள் மதியம் அந்தம்மா வீட்டுலதான் தரையில உக்காந்து கறிக் குழம்பும் சோறும் சாப்பிட்டாரு. உண்மையான அந்த எளிமை இப்ப யாருக்கிட்ட இருக்கு?. தேர்தல்ல வெற்றி பெற்று குடும்பத்தோட எம்.ஜி.ஆரை பார்க்கப் போயிருந்தேன். என்னைக் கட்டித் தழுவி வாழ்த்தியவர், 3 மாதக் கைக்குழந்தையாக இருந்த என் பையனுக்கு வெற்றித்தமிழன்னு பேரு வைச்சாரு.
அப்பெல்லாம் மக்கள் காசு பணத்த எதிர்பார்க்கமாட்டாங்க. ஆனா, இப்ப திமுக, அதிமுக ரெண்டு கட்சியிலயுமே காசு கொடுக்க வங்களுக்குத்தான் மரியாதையா இருக்கு. புள்ளைகள காப்பாத் துறதுக்காக கருணாநிதியும் சசிகலா வகையறாக்களை காப்பாத்துறதுக் காக ஜெயலலிதாவும் மெனக் கெடுறாங்க. இவங்களுக்குள்ள இருக்கிற பதவிப் போட்டியில ஓட்டுக்கு காசு குடுத்து நாட்டைக் கெடுத்துட்டாங்க’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT