Published : 09 May 2016 02:56 PM
Last Updated : 09 May 2016 02:56 PM
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேசிய கட்சிகள் கொடுக்கும் கடுமையான போட்டிக்கு மத்தியில் அதிமுகவால் தொகுதிக்குள் பெரிதாக சோபிக்க முடியவில்லை.
விளவங்கோடு தொகுதிக்குள் குழித்துறை நகராட்சி, கடையல், அருமனை, இடைக்கோடு, பளுகல், பாகோடு, உண்ணாமலைக்கடை, நல்லூர், களியக்காவிளை, பேரூராட்சிகளை உள்ளடக்கிய பகுதிகள் வருகின்றன. மலையாள மொழி பேசும் மக்கள் கணிசமாக உள்ளனர்.
தீர்க்கப்படாத பிரச்சினைகள்
தொகுதி மக்களின் பிரதான தொழில்கள் ரப்பர் சாகுபடி, தேனீ வளர்ப்புத் தொழில். மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து ரப்பரை அதிக அளவில் இறக்குமதி செய்வதால், உள்ளூரில் ரப்பருக்கு உரிய விலை இல்லை. இதேபோல் ரப்பர் சாகுபடியாளர்களின் பெரும்பாலான பட்டா நிலப்பரப்பு தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. ரப்பர் தொழிற்சாலை, ரப்பர் மற்றும் தேனீ ஆராய்ச்சி மையம் தொடர்பான கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.
காமராஜர் ஆட்சிக் காலத்தில் கேரளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு நெய்யாறு இடதுகரை சானல் மூலம் தண்ணீர் வந்தது. கடந்த 2004-ம் ஆண்டு கேரள அரசு தன்னிச்சையாக நெய்யாறு தண்ணீரை தமிழகத்துக்கு தராமல் நிறுத்திவிட்டது.
காந்தியவாதி சசிபெருமாள் உண்ணாமலைக்கடை பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி செல்பேசி கோபுரத்தின் மீது ஏறி போராடியபோது உயிரிழந்தார். அதன் பிறகும் அப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. மதுக்கடையை அகற்றாதது, ஓட்டை உடைசல் பேருந்துகளை மாற்றாதது ஆகிய காரணங்களால் தேர்தல் களத்தில் அதிமுகவால் ஒரு அடி கூட முன்னேற முடியவில்லை.
மார்க்சிஸ்ட் முந்துகிறது
கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி அதிக அளவில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டங்களை நடத்தியது மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் சார்பில் போட்டியிடும் செல்லசுவாமி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவராகவும் உள்ளார். இவருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமாகா தலைவர் வாசன் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்துள்ளனர்.
தொகுதிக்குள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு வலுவான அடித்தளம் உள்ளது. அதனோடு கூட்டணி பலமும் சேர்வதால் மார்க்சிஸ்ட் கட்சி பிரச்சாரத்தில் முந்துகிறது.
பாஜக நம்பிக்கை
பாஜக சார்பில் முன்னாள் மாவட்டத் தலைவர் தர்மராஜ் களத்தில் உள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியில் பாஜகவே, முன்னிலை வகித்தது. அந்த வெற்றியை மீண்டும் தக்கவைக்க பாஜகவும் வியூகம் வகுத்து செயல்படுகிறது.
நெருக்கடியில் காங்கிரஸ்
காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி, கடந்த 5 ஆண்டுகளாக தான் நிறைவேற்றிய பணிகள் குறித்து பிரச்சாரம் செய்து வருகிறார். ஊடக விவாதங்களில் அதிகம் பங்கேற்றவர் என்பதாலும், தொகுதிக்குள் இருக்கும் அறிமுகத்தாலும் மிக எளிதாக மக்களை சென்றடைய அவரால் முடிகிறது. எனினும், காங்கிரஸுக்குள் இருக்கும் சிலரே அவரின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை பொடுகின்றனர். அதோடு, மார்க்சிஸ்ட், பாஜகவின் நெருக்கடியால் விஜயதரணி வெற்றிபெற கடுமையாகப் போராட வேண்டியுள்ளது.
விளவங்கோடு மக்கள் இந்த மும்முனைப் போட்டியில் யாருக்கு முதலிடம் கொடுப்பார்கள் என்பது தேர்தல் முடிவில்தான் தெரியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT