Published : 27 May 2022 06:10 AM
Last Updated : 27 May 2022 06:10 AM

பாம்பன் விவேகானந்தர் நினைவு மண்டப ஒளி-ஒலி காட்சிக்கூடம்: போக்குவரத்து வசதியில்லாததால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

பாம்பன் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள ஒளி-ஒலி காட்சிக்கூடம்

ராமேசுவரம்: போக்குவரத்து வசதி இல்லாத பாம்பன் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட ஒளி-ஒலி காட்சிக்கூடத்தைக் காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டாததால் அரசின் நிதி ரூ.5.69 கோடி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலக அரங்கில் இந்து சமயத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் அமெரிக்காவின் சிகாகோவில் நிலைநிறுத்திவிட்டு, சுவாமி விவேகானந்தர் அங்கிருந்து இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார். இந்தச் சம்பவம் நடந்து நூறாண்டுகளை கடந்து ராமகிருஷ்ண தபோவனம் மூலம் 2009-ல் விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டப்பட்டது. இங்கு விவேகானந்தர் புகைப்படக் காட்சிக் கூடமும், வாசக சாலையும் அமைந்துள்ளன.

ராமேசுவரத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்ல காலை, மாலை இரு முறை மட்டுமே அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் ராமேசுவரம், தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் போக்குவரத்து வசதியின்மையால் பாம்பன் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வருவதில்லை.

இந்நிலையில் மத்திய அரசின் சுதேஷ்தர்சன் திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறை மூலம் ரூ.5 கோடியே 69 லட்சம் நிதியில் ஒலி-ஒளி காட்சிக்கூடம் 2020-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினர் இந்த காட்சிக் கூடத்தில் பெரியவர்களுக்கு ரூ.125, சிறியவர்களுக்கு ரூ.50 கட்டணத்திலும் ராமாயணம், விவேகானந்தர் மற்றும் வரலாறு தொடர்புடைய படங்களையும் ஒளிபரப்பினர்.

பகலிலேயே போக்குவரத்து வசதி குறைவான பாம்பன் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள இந்த காட்சிக்கூடத்தை இருட்டிய பின்னரே கண்டு ரசிக்க முடியும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் கட்டணம் செலுத்தி பார்வையிட ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் அரசு நிதி ரூ.5.69 கோடி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இங்கு போதுமான போக்குவரத்து வசதிகளை செய்வதுடன், கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x