Published : 27 May 2022 12:53 AM
Last Updated : 27 May 2022 12:53 AM
சென்னை: சென்னையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது ஒன்றிய அரசு என்பதை அழுத்தத்துடன் பதிவு செய்ததுடன் நீட், ஜிஎஸ்டி, தமிழ் அலுவல் மொழி மற்றும் கச்சத்தீவு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். பிரதமர் முன்னிலையில் பேசிய முதல்வர் ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "இந்தியாவின் ஒரு சாதாரண குடிமகனாகவும், ஒரு பெருமைமிகு தமிழனாகவும், இன்று தமிழக முதல்வர் ஸ்டாலினின் மோசமான நடத்தையை கண்டு வெட்கி தலைகுனிகிறேன். பிரதமர் நரேந்திர மோடி, ஒரு நாட்டின் பிரதமராக இன்று சென்னை வந்தார், அல்லது அவர் பாஜக நிகழ்ச்சிக்காக வரவில்லை. இன்றைய நிகழ்ச்சியில் பிரதமரிடத்தில் நம் முதல்வர் மரியாதை காண்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தன்னை தானே இழிவுபடுத்திக் கொண்டார்.
முதல்வர் ஸ்டாலின் கச்சத்தீவு பற்றி பேச விரும்புகிறார். ஆனால், அந்த தீவை 1974ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தான் இலங்கைக்கு பரிசாக அளித்தார் என்பதையும், அப்போது காங்கிரஸ் உடன் திமுக தான் கூட்டணி வைத்திருந்தது என்பதையும் முதல்வர் எளிதாக மறந்துவிட்டார். இந்த விஷயத்தில் திடீரென முதல்வருக்கு விழிப்பு வந்தது ஏன்.
ஜிஎஸ்டி விவகாரத்தை பொறுத்தவரை, ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் எப்போதும் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்படுபவை என்பதை முதல்வர் ஸ்டாலின் தெரிந்துகொள்ள வேண்டும். இழப்பீட்டுத் தொகை குறித்து கோரிக்கை முன்வைத்தார். இந்த கோரிக்கையிலும் ஜூலை 2022க்குப் பிறகு நிலுவை இழப்பீட்டை வழங்குவதற்கான விருப்பத்தை தமிழக அரசே எடுத்தது. இல்லாத பிரச்சனையை கொண்டு பிரச்னையை உருவாக்குகின்றனர்.
அதேபோல், தொடர்ந்து கூட்டாட்சி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிவருகிறார். ஆனால், கூட்டாட்சிக்கு சிறந்த உதாரணமாக விளங்கும் ஜிஎஸ்டி கவுன்சிலை அவமதிக்கிறார். முதல்வர் ஸ்டாலின் தனது விருப்பு வெறுப்புகள் மட்டுமே முக்கியமென்று நினைக்கிறார். இதுதான் ஒருமித்த கருத்தை புரிந்துகொள்ளாத வழக்கமான வாரிசு அதிகாரம் என்பது.
கடந்த ஓராண்டாக ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்து வருவதுடன், அதனால் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களும் பயனடைந்து வருகின்றன. ஆனால் முதல்வர் ஸ்டாலினோ அல்லது திமுகவோ உண்மைகளை கண்டுகொள்வதோ பொருட்படுத்துவதோ கிடையாது. அவர்களுக்கு அரசியல் செய்வதில் மட்டுமே ஆர்வம்.
பல சந்தர்ப்பங்களில் பிரதமர் மோடி, நமது தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரம் மீது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஏனென்றால், இந்த பிரச்சினையில் அவர் கூறியதை அவரே நம்ப மாட்டார். அற்ப அரசியல் மட்டுமே முதல்வர் செய்து வருகிறார்" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT