Published : 26 May 2022 08:26 PM
Last Updated : 26 May 2022 08:26 PM
சென்னை: "இந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்காக தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. பொறியியல், மருத்துவப் படிப்புகளை தாய் மொழியில் படிக்க முடியும். தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இதனால் பயனடைவார்கள்" என்று சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக அரசு முறைப் பயணமாக இன்று சென்னை வந்தார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் மத்திய, மாநில அரசுத் துறைகளின் சார்பில் ரூ.31,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்தார்.
பின்னர், பிரதமர் நரேந்திர மோடி பேசியது: "ஒவ்வொரு துறையிலும் தமிழகத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர், தலைசிறந்தவராக விளங்குகின்றனர். அண்மையில்தான் நான், காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு எனது இல்லத்தில் வரவேற்பு அளித்தேன். இதுவரை நடந்த போட்டிகளில் இதுதான் இந்தியாவின் ஆகச்சிறந்த செயல்பாடு என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம் வென்ற 16 பதக்கங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரின் பங்கு இருந்தது. அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்புகளில் ஒன்று.
தமிழ் மொழி நிலையானது, நித்தியமானது.தமிழ் கலாசாரம் உலகளாவியது. சென்னை முதல் கனடா வரை, மதுரை முதல் மலேசியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை, சேலம் முதல் சவுத் ஆப்பிரிக்கா வரை பொங்கல் மற்றும் புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் மிகுந்தவை.
பிரான்ஸ் நாட்டின் கான் நகரில் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அங்கு மண்ணின் மைந்தரான அமைச்சர் எல்.முருகன், தமிழகத்தின் பாரம்பரிய உடையுடன் சிவப்புக் கம்பளத்தில் நடந்தார். இது உலகெங்கும் உள்ள தமிழர்களை பெருமமை கொள்ளச் செய்தது.
தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் மேலும் ஓர் அத்தியாயத்தை, கொண்டாட நாம் அனைவரும் இங்கே கூடியிருக்கிறோம். ரூ.31 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட திட்டங்கள், தொடங்கப்படவும், அடிக்கல் நாட்டப்பட்டும் உள்ளன. இந்தத் திட்டங்கள் குறித்து சில விஷயங்களை நான் குறிப்பிட விரும்புகிறேன்.
சாலைக் கட்டுமானத்தின் மீது செலுத்தப்பட்டிருக்கும் கவனம் தெளிவாகப் புலப்படுகிறது. எதற்காக இந்தத் திட்டத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றால், இது பொருளாதார வளர்ச்சியோடு நேரடியாக தொடர்பு கொண்டது. பெங்களூரு சென்னை விரைவு சாலை இரண்டு முக்கியமான வளர்ச்சி மையங்களை இணைக்கும். சென்னை துறைமுகத்தை மதுரவாயலோடு இணைக்கும் 4 வழி உயர்த்தப்பட்ட பாதை சென்னை துறைமுகத்தை மேலும் திறன்மிக்கதாக மாற்றுவதோடு, மாநகர போக்குவரத்து நெரிசலையும் குறைக்கும்.
நெரலூரு முதல் தர்மபுரி, மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரையிலான விரிவாக்கம் மக்களுக்கு பல்வேறு ஆதாயங்களை ஏற்படுத்தும். 5 ரயில்வே நிலையங்கள் மீள் மேம்பாடு செய்யப்படவிருப்பது எனக்கு மகிழ்வை தருகிறது. எதிர்கால தேவையைக் கருத்தில்கொண்டு நவீனமயமாக்கலும், மேம்பாட்டு பணிகளும் செய்யப்படுகின்றன. அதேநேரத்தில் இந்த வளர்ச்சிப் பணிகள் உள்ளூர் கலை, கலாசார பணிகளுக்கு தொடர்புள்ளதாக இருக்கும். மதுரைக்கும் தேனிக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து என் விவசாய சகோதர சகோதரிகளுக்கு உதவிகரமாக இருக்கும். விவசாயப் பொருட்கள் சந்தைப்படுத்துதலுக்கு இது உதவும்.
பிரதம மந்திரி ஆவஸ் யோஜனா என்ற பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்திற்குட்பட்டு, வரலாற்று சிறப்பு மிக்க சென்னை கலங்கரை விளக்க வீட்டு வசதி திட்டத்தின்படி, வீடுகள் கிடைக்கப்பெறும் அனைவருக்கும் நான் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது எங்கள் அனைவருக்கும் மிகுந்த நிறைவை அளித்த ஒரு திட்டம். மலிவு விலையில், நீடித்த, சூழலுக்கேற்ற இல்லங்களை உருவாக்குவதே மிக சிறப்பான நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதில் ஓர் உலகத் தரமான சவாலை நாங்கள் மேற்கொண்டோம். அதில் சாதனை படைக்கும் நேரத்தில், இப்படிப்பட்ட கலங்கரை விளக்க திட்டம் மெய்பட்டிருக்கிறது. அதுவும் சென்னையில் அமைந்திருப்பது எனக்கு மகிழ்வை அளிக்கிறது.
திருவள்ளூர் முதல் பெங்களூரு வரையிலும், எண்ணூர் முதல் செங்கல்பட்டு வரையிலும், இயற்கை எரிவாயு குழாய் பாதிக்கும் பணிகள் காரணமாக தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திர மக்களுக்கு இயற்கை எரிவாயு கிடைப்பது எளிதாக இருக்கும். நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்கவும், சென்னை துறைமுகத்தை பொருளாதார வளர்ச்சியின் மையமாக மாற்றும் தொலைநோக்கு பார்வையோடும், சென்னையில் ஒரு பன்னோக்கு பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
நாட்டின் பிற மாநிலங்களிலும் இதுபோன்ற பன்னோக்கு பூங்காக்களை அமைக்க மத்திய அரசு அர்ப்பணிப்போடு உள்ளது. இவை நமது நாட்டில் ஒரு முன்மாதிரி மாற்றத்தை ஏற்படுத்தும். பல்வேறு துறைகளில் உள்ள இந்தத் திட்டங்கள் ஒவ்வொன்றுமே வேலைவாய்ப்பையும், தற்சார்பு நிலை நோக்கிய நமது உறுதிபாட்டினையும் ஊக்கப்படுத்தும்.
ஒரு வளமான வாழ்க்கைத்தரத்தை உங்களது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் என நீங்கள் அனைவரும் விரும்புவீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க விரும்புவீர்கள். இதற்கான முக்கிய தேவைகளில் ஒன்றுதான் அடிப்படை உள்கட்டமைப்பு. உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்த நாடுகள் எல்லாம் வளரும் நாடுகள் என்ற நிலையில் இருந்து வளர்ந்த நாடுகள் என்ற நிலைக்கு உயர்ந்தன என்பதை வரலாறு நமக்கு கற்பிக்கிறது. தலைசிறந்த தரமும், நீடித்த தன்மையும் கொண்ட உள்கட்டமைப்பு கொண்ட வசதிகளை உருவாக்குவதில் இந்திய அரசு முழுகவனம் செலுத்தி வருகிறது.
சிறப்பான சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம். சமூக கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் ஏழைகளின் நலனை உறுதி செய்ய முடியும். அனைத்து துறை திட்டங்களும் அனைவருக்கும் சென்று சேரும்படி செயல்பட்டு வருகிறோம். ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய்வழி குடிநீர் கொண்டு செல்ல பணியாற்றி வருகிறோம்.
புற கட்டமைப்பின் மீது கவனம் செலுத்தும்போது இந்தியாவில் உள்ள இளைஞர்கள் பயன்பெறுவர். அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக இணைய சேவை கிடைக்கும்படி செயல்பட்டு வருகிறோம்.
பிரதமரின் கதி சக்தி திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பாக நாங்கள் தொடங்கினோம். இந்த ஆண்டு பட்ஜெட்டின்போது, ஏழரை லட்சம் கோடி ரூபாய் மூலதன செலவினங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது என்பது வரலாற்று அதிகரிப்பு. பட்ஜெட் ஒதுக்குவது மட்டுமின்றி, இந்த திட்டங்கள் குறித்த நேரத்தில், ஓளிவு மறைவற்று நிறைவு செய்யபப்டுவதையும் நாங்கள் உறுதி செய்து வருகிறோம்.
தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் மேலும் பிரபலப்படுத்த இந்திய அரசு முழு அர்ப்பணிப்போடு உள்ளது. செம்மொழி தமிழராய்ச்சி நிறுவனத்துக்கு புதிய வளாகம் ஒன்று, இந்த ஆண்டு ஜனவரியில் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த புதிய வளாகத்திற்கு முழுக்க முழுக்க மத்திய அரசே நிதி வழங்குகிறது. அதில் நூலகம், பல்லூடக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. பனராஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில், சுப்ரமணிய பாரதியார் பெயரில் ஒரு இருக்கை அண்மையில்தான் அமைக்கப்பட்டது. பனராஸ் இந்துப் பல்கலைக்கழகம் எனது தொகுதியில் இருப்பது எனக்கு மகிழ்ச்சி.
தேசிய கல்விக் கொள்கை அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்காக தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. பொறியியல், மருத்துவப் படிப்புகளை தாய் மொழியில் படிக்க முடியும். தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இதனால் பயனடைவார்கள்.
அண்டை நாடான இலங்கை மிகுந்த கடினமான சூழலை கடந்துகொண்டுள்ளது. நெருக்கடி நிலையில் உள்ள இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்து வருகிறது. எரிபொருள், பண உதவி, அத்தியாவசியப் பொருட்கள் என அனைத்து விதமான உதவிகளையும் இந்தியா செய்துவருகிறது” என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...