Published : 26 May 2022 05:36 PM
Last Updated : 26 May 2022 05:36 PM
சென்னை: அரசு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார். சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன்,கே.என்.நேரு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
சென்னை விமான நிலையத்திலிருந்து அடையாறு ஐஎன்எஸ் தளத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து காரில் புறப்பட்டு நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள் விளையாட்டரங்கத்திற்கு வருகிறார்.
பிரதமர் காரில் வரும் சிவானந்தா சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட வழிதோறும் தமிழக பாஜக சார்பில் கட்சிக் கொடிகள்,தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல் சிவபெருமான் உருவம், நாட்டுப்படகு உள்ளிட்டவையும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. தமிழக பாரம்பரிய கலைகள் மற்றும் பரதநாட்டியக் கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும், வழிநெடுகிலும் கட்சித் தொண்டர்கள் மாலைகள், பூரண கும்பத்துடன், ‘வணக்கம் மோடி’ வாக்கியம் பொறிக்கப்பட்ட வண்ண பலூன்கள் மற்றும் கட்சிக் கொடிகளை ஏந்தியவாறு வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுத் துறைகளின் சார்பில் ரூ.31,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திட்டங்கள் என்னென்ன?
சென்னை - பெங்களூரு இடையே ஆந்திரா வழியாக ரூ.14,870 கோடி மதிப்பில் 262 கி.மீ. விரைவுச்சாலை, சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே 21 கி.மீட்டருக்கு ரூ.5,850 கோடியில் இரண்டு அடுக்கு 4 வழி உயர்மட்ட சாலை, நெரலூரு- தருமபுரி இடையே ரூ.3,870 கோடியில் 4 வழிச்சாலை, ரூ.720 கோடியில் மீன்சுருட்டி - சிதம்பரம் நான்கு வழிச்சாலை ஆகிய சாலை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை எழும்பூர், ராமேசுவரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் ரூ.1,800 கோடியில் சீரமைக்கப்பட உள்ளன. சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் சென்னை அருகே மப்பேட்டில் ரூ.1,400 கோடியில் பன்மாதிரி போக்குவரத்து பூங்கா (மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க்) அமைக்கப்படுகிறது. இந்த திட்டங்கள் உட்பட மொத்தம் ரூ.28,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
அத்துடன், ரூ.2,900 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 5 திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். மதுரை - தேனி இடையே ரூ.500 கோடியில் மேம்படுத்தப்பட்ட அகல ரயில் பாதை, சென்னை தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரூ.590 கோடியில் 3-வது ரயில் பாதை, எண்ணூர் - செங்கல்பட்டு இடையே ரூ.850 கோடியில் 115 கி.மீ. நீளத்துக்கான இயற்கை எரிவாயு குழாய் திட்டம், திருவள்ளூர் - பெங்களூரு இடையே 271 கி.மீ. தொலைவில் 910 கோடியிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின்கீழ் குறைந்த செலவில் வீடு கட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ரூ.116 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,152 வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார்.
பிரதமரின் வருகையையொட்டி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 5 கூடுதல் ஆணையர்கள், 8 இணை ஆணையர்கள், டிஐஜிக்கள், 29 துணை ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட மொத்தம் 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிகழ்ச்சி நடக்கும் பகுதிகளில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டு, அந்நிய நபர்கள் உள்ளனரா என கண்காணிக்கப்படுகிறது. சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ட்ரோன் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment