Published : 26 May 2022 01:33 PM
Last Updated : 26 May 2022 01:33 PM
சென்னை: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஈ.வெ.ரா சாலை, அண்ணா சாலை, எஸ்.பி படேல் சாலை, ஜி.எஸ்.டி சாலை ஆகிய சாலைகளில் மக்கள் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்று காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இன்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதற்காக ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் மாலை சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்துக்கு மாலை 5.10 மணிக்கு வரும் பிரதமர் சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையார் வந்து அங்கிருந்து, சாலை வழியாக நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு செல்லும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 5.45 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வரும் பிரதமர் மோடி, இரவு 7 மணி வரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
மோடி வருகையையொட்டி சென்னையில் 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையம், ஐ.என்.எஸ். அடையார், நேரு உள்விளையாட்டு அரங்கம் ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி வருகையால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யயப்பட்டுள்ளது. இதன்படி நேரு உள்விளையாட்டு அரங்கம் அமைந்துள்ள பெரியமேடு பகுதியைச் சுற்றியுள்ள ஈ.வெ.ரா சாலை, தாஷ்பிரகாஷ் முதல் சென்னை மருத்துவக் கல்லூரி வரையிலான சாலையில் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அண்ணா சாலை, எஸ்.பி படேல் சாலை, ஜி.எஸ்.டி சாலை ஆகியவற்றில் போக்குவரத்து இயக்கம் மந்தமாக நடைபெறும் என்பதால் வாகன ஓட்டிகள் மாற்று சாலைகளை பயன்படுத்திக் கொள்ளவும் மாற்றுவழிகளில் செல்ல முன்கூட்டியே திட்டமிடுமாறும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...