Published : 26 May 2022 12:48 PM
Last Updated : 26 May 2022 12:48 PM
காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் உள்ள புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா இன்று(மே 26) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சனிபகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய இக்கோயிலில், ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டு விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதனையொட்டி கொடிமரத்து விநாயகர், கொடி மரத்துக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைக் காட்டப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்து வேத மந்திரங்கள் முழங்க பிரகார உலாவாக ரிஷபக் கொடி எடுத்து வரப்பட்டு கொடி மரத்தில் ஏற்றப்பட்டு மகா தீபாராதனைக் காட்டப்பட்டது.
இந்நிகழ்வில் கோயில் நிர்வாக அதிகாரி கு.அருணகிரிநாதன், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஜூம் 2ம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதியுலா, 7 ம் தேதி பஞ்சமூர்த்திகள் சகோபுர வீதியுலா, ஜூன் 9 ம் தேதி தேரோட்டம், 10ம் தேதி சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் எழுந்தருளி சகோபுர வீதியுலா, 11 ம் தேதி தெப்போற்சவம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT