Published : 26 May 2022 06:14 AM
Last Updated : 26 May 2022 06:14 AM
விருதுநகர்: மாவட்ட தலைநகராக உள்ள விருதுநகரிலிருந்து வெளி மாவட்டங் களுக்கு நேரடிப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்றும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் பொதுமக்களும் வணிகர்களும் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து விருது நகர் தனி மாவட்டமாக பிரிக்கப் பட்ட பின்னர் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வந்தன. விருதுநகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், அதிக பேருந்துகளை இயக்கவும், வெளியூர் பேருந்துகள் எளிதில் வந்து செல்லவும் வசதியாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் விருதுநகர்-சாத்தூர் சாலையில் சுமார் ரூ1.50 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
ஆனால் இப்புதிய பேருந்து நிலையம் செயல்படாமல் தற்போது காட்சிப்பொருளாக மட்டுமே இருந்து வருகிறது.
விருதுநகர் வழியாகச் செல்லும் வெளியூர் பேருந்துகள் பெரும்பாலும் புதிய பேருந்து நிலையத்துக்குள் வந்துசெல்வதில்லை. ஒருசில பேருந்துகளைத் தவிர அனைத்து பேருந்துகளும் புறவழிச்சாலை வழியாகவே இயக்கப்படுகின்றன.
விருதுநகரிலுள்ள புதிய பேருந்து நிலையம் செயல்படாததற்கு மற்றொரு முக்கிய காரணம் விருதுநகரிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு நேரடியாக பேருந்துகள் இயக்கப்படாததே ஆகும். இதனால் பயணிகளும் இங்கு வருவதில்லை. விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு 2 அரசு விரைவு பேருந்துகளும், திருப்பதிக்கு ஒரு பேருந்தும் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மதுரை செல்லும் பேருந்துகள் தவிர தூத்துக்குடிக்கும், திருச்செந்தூ ருக்கும் 3 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் விருதுநகரிலிருந்து வெளியூர் செல்பவர்கள் மதுரை சென்றே வெளிமாவட்டங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.
இதற்காக 2 அல்லது 3 பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டிய நிலையே பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
எனவே விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்து மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரிக்கு நேரடியாக பேருந்துகள் இயக்கப்பட வேண்டுமென பொதுமக்களும், வணிகர்களும் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரனுடன் நகர்மன்றத் தலைவர் மாதவன் மற்றும் கவுன்சிலர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது வெளியூர் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையம் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT