Published : 15 Jun 2014 01:31 PM
Last Updated : 15 Jun 2014 01:31 PM
மின்வாரிய அதிகாரிகளின் தவறான முடிவுகளால், தமிழகத்தில் ஜூன் 1க்குப் பின் அறிவிக்கப்படாத மின் வெட்டு அமலாகி மக்களை அவதிக்குள்ளாக்கி உள்ளது. தொழிற்சாலைகளுக்கும், வெளி மாநில விற்பனைக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதால், இந்த மின் வெட்டு ஏற்பட்டுள்ளதாக மின் துறை விநியோக பிரிவு பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி மின் கட்டுப்பாடுகள் அறவே நீக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த உத்தரவு, உயரழுத்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மட்டுமா அல்லது ஒட்டு மொத்தமாக அனைத்து விதமான வீட்டு உபயோக நுகர்வோருக்கா என்ற குழப்பம் எழுந்துள்ளது. அதேநேரம், சென்னையில் கடந்த மே மாதம் வரை அறிவிக்கப்பட்ட மின் வெட்டு நேரத்தை ஜூன் மாதத்தில் தமிழக மின் வாரியம் அறிவிக்கவில்லை. இதனால், வீடுகளுக்கு மின் வெட்டு இருக்காது என்று பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து ஜூன் 1 முதல் சுமார் நான்கு நாட்கள் மட்டும் மின் வெட்டு இல்லாத நிலை இருந்தது. ஆனால் அதன் பிறகு அறிவிக்கப்படாத மின் வெட்டு அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் குறிப்பாக வடசென்னை மற்றும் சென்னை புறநகரப் பகுதிகளில் ஒட்டு மொத்தமாக, தினமும் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேல் மின் வெட்டு அமலாகிறது. இந்த மின் வெட்டு இரவிலும் நீடிப்பதால் கோடை வெப்பத்தில் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஜூன் 1 முதல் மின் வெட்டு இல்லை என்ற அறிவிப்பு வெளியான நிலையில், மின் வெட்டு தொடர்வது ஏன் என்று பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழக மின் துறையில் இயக்கம் மற்றும் பராமரிப்புத் துறை பொறியாளர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
மின் துறையில் இருக்கும் உயரதிகாரிகள் தவறான முடிவுகளை எடுத்து, அதை தமிழக அரசுக்கு அளித்துள்ளனர். கோடையில் காற்றாலை சீசன் இருந்தாலும், மின்சார தேவையும் அதிகமாகும். இதைக் கணக்கிட்டு காற்றாலையை பயன்படுத்தி நிலைமையை சமாளிப்பது தான் ஒவ்வொரு ஆண்டின் வழக்கமான உள்ளது.
ஆனால், இம்முறை மின் வெட்டு இல்லை என்ற மாயையை ஏற்படுத்திவிட்டு, இன்னொரு புறம் தமிழகத்திலிருந்து மின்சாரத்தை வெளி மாநிலத்துக்கு விற்கலாம் என்றும், உயரழுத்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவை எந்தக் கட்டுப்பாடுமின்றி, மின்சாரத்தை பயன்படுத்தலாம் என்றும் உத்தரவிட்டுள்ளதால், புதிய சிக்கல் எழுந்துள்ளது.
இதனால் ஆங்காங்கே மின் விநியோக துணை மின் நிலையத் தில் இருக்கும் பொறியாளர்களும், உதவி செயற்பொறியாளர் உள்ளிட்டோரும் எந்த நேரத்தில் எந்த பகுதிக்கு மின் வெட்டை ஏற்படுத்துவது என்று புலம்பித் தவிக்கும் நிலையில் உள்ளனர். ஆனால் இந்த நடைமுறையை கண்டுகொள்ளாமல், மாநில மின் விநியோக மைய அதிகாரிகள், தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, அவ்வப்போது அறிவிப்பில்லாத மின் வெட்டை அமல்படுத்த உத்தரவிடுவதால், பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மின் வாரிய விநியோக மைய அதிகாரிகளும், வணிக பிரிவு அதிகாரிகளும் மேற்கொண்ட தவறான முடிவுகளால், அரசின் அறிவிப்பு பொய்த்துப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
செயல்படாத கால் சென்டர் ‘1912’
மின் தடை குறித்து புகார் அளிக்கவும், எப்போது மின்சாரம் வரும், என்ன பிரச்சினை என்பதை தெரிந்து கொள்ளவும், 1912 என்ற தமிழக மின் வாரிய எண்ணிற்கு புகார் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், ஜூன் 1ம் தேதிக்குப் பின், அறிவிக்கப்படாத மின் வெட்டால், பொதுமக்கள் தொடர்ந்து, 1912 எண்ணுக்கு போன் செய்கின்றனர். ஆனால், கால் சென்டர் ஊழியர்கள் சரியாக போனை எடுக்காததால் எப்போதும் ரிங் ஆகிக் கொண்டே இருக்கும் நிலை உள்ளது. இதனால் இருளில் தவிக்கும் மக்கள், இன்னும் அதிக எரிச்சலுக்கும், கோபத்துக்கும் ஆளாகியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT