Published : 26 May 2022 06:59 AM
Last Updated : 26 May 2022 06:59 AM

இசையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அரசுப் பணி, சுயதொழிலுக்கு வித்திடும் அரசு இசைப் பள்ளிகள்

திருச்சி: தமிழகத்தில் அரசு இசைப்பள்ளிகளில் இசைப் படிப்புகளை முடித்தவர்களுக்கு அரசுப் பணி அல்லது சுயதொழில் செய்வதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதாக இசைக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இசைக்கல்வியை பரவலாக்குதல், மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்துதல், சிறந்த இசைக் கலைஞர்களை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத்துறையின் கீழ் தமிழகத்தில் திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், சீர்காழி உள்ளிட்ட 17 இடங்களில் அரசு இசைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு குரலிசை, நாகஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் 3 ஆண்டுகள் சான்றிதழ் படிப்பு கற்றுத் தரப்படுகின்றன.

இந்த பள்ளியில் சேர குறைந்தபட்சம் 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நாகஸ்வரம், தவில் மற்றும் தேவாரம் ஆகிய படிப்புகளுக்கு எழுதப்படிக்கத் தெரிந்திருத்திருந்தால் போதுமானது.

இந்த பள்ளிகளில் இசைப் பயிற்சியை முடித்த ஆயிரக்கணக்கானோர் கோயில்களில் (அரசுப் பணியில்) பணியில் சேர்ந்துள்ளனர். மேலும், தனியாக கச்சேரிகள்(சுயதொழில்) நடத்தியும் வருகின்றனர். இப்பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான சேர்க்கை மே 23-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட அரசு இசைப் பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) என்.ராஜேஸ்வரி ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: இசைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10 மாதங்களுக்கு தலா ரூ.400 வீதம் ரூ.4 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தொலைதூரத்திலிருந்து வரும் மாணவ, மாணவிகளுக்கு விடுதி வசதியும், இலவச பேருந்து பயண அட்டையும் வழங்கப்படுகிறது.

அனைத்து அரசு இசைப் பள்ளிகளிலுமே அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்த, தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, இசைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக இங்கு சேரும் மாணவ, மாணவிகள் 3 ஆண்டுகள் படிப்பை முடித்து விட்டு வெளியே செல்லும் போது, சிறந்த இசைக் கலைஞர்களாகவே செல்கின்றனர்.

இங்கு பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு கோயில்கள், பள்ளிகளில் உள்ள அரசுப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதுபோன்று ஏராளமான கலைஞர்கள் கோயில்களில் பணியில் சேர்ந்துள்ளனர்.

மேலும், சுயமாகவும், குழுவாகவும் சேர்ந்து சுப நிகழ்ச்சிகள், கோயில்களில் இசைக் கச்சேரிகள் நடத்தியும், தனியாக பயிற்சி மையங்களை அமைத்து சுயதொழிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசுப் பணிக்கும், சுயதொழிலுக்கும் வாய்ப்பளிக்கும் இசைக் கல்வியை கற்க இசையில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் அரசு இசைப்பள்ளியில் சேர்ந்து பயனடைய வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x