Published : 25 May 2022 07:54 PM
Last Updated : 25 May 2022 07:54 PM
சென்னை: சென்னை - சிந்தாதிரிப்பேட்டை பாஜக பிரமுகர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம், சாதாரண மக்களின் மனதில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட பாஜக மாவட்ட எஸ்.சி அணித் தலைவர் பாலசந்தர் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை ஆறுதல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "சிறை என்பது குற்றவாளிகளை ஊக்குவிக்கும் யுனிவர்சிட்டியாக மாறியுள்ளது; குற்றவாளியை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். இந்தச் சம்பவம் சாதாரண மக்களின் மனதில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
19 நாட்களில் 20 கொலை நடந்துள்ளன. சென்னையில் தினந்தோறும் இயல்பாக கொலை சம்பவம் நடைபெறுகிறது. உளவுத் துறை சரியாக செயல்படவில்லை, செயலிழந்து விட்டது. இந்தியாவில் மற்ற மாநகரங்களை விட சென்னையில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது.தேசிய அளவில் புகழ் பெற்ற தமிழக காவல் துறை அரசியல் தலையீடுகளால் நற்பெயரை இழந்துள்ளது" என்று தெரிவித்தார்.
பாஜக பிரமுகர் வெட்டி கொலை பின்புலம்:
சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர் (30). இவர், மத்திய சென்னை பாஜக எஸ்.சி. பிரிவு மாவட்டத் தலைவராக இருந்தார். இவர் நேற்று இரவு 7.50 மணிக்கு சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவில் நின்று கொண்டிருந்தார். அவருக்கு பாதுகாப்புக்காக சென்ற துப்பாக்கி ஏந்திய காவலர் பாலகிருஷ்ணன், அருகில் இருந்த டீக்கடைக்கு டீ அருந்தச் சென்றிருந்தார். அப்போது, 3 பேர் கொண்ட கும்பல் பாலச்சந்தரை நடுரோட்டில் திடீரென்று சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் பாலச்சந்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் தப்பியோடியது.
கொலை செய்யப்பட்ட பாலச்சந்தருக்கு ஏற்கெனவே கொலை மிரட்டல் இருந்து வந்துள்ளது. எனவே அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு பாலச்சந்தரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் வீரபுத்திரனை, 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, ‘எப்படியும் பாலச்சந்தரைக் கொலை செய்துவிடுவோம்’ என்று மிரட்டல் விடுத்திருந்தனர். மிரட்டல் தொடர்பாக போலீஸ்காரர் வீரபுத்திரன் அளித்த புகாரின்பேரில் சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்தனர். மேலும், 2 பேரை தேடி வந்தனர். இந்நிலையில்தான், பாலச்சந்தர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT