Published : 25 May 2022 01:42 PM
Last Updated : 25 May 2022 01:42 PM
கரூர்: கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவர் தேர்தல் 2-வது முறையாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் வேட்பாளர் கலாராணி ஆதரவாளர்கள் புலியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி 8-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் அடைக்கப்பன் போட்டியின்றி தேர்வான நிலையில் 14 வார்டுகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக 12 இடங்களிலும், முதல் வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கலாராணி, 4-வது வார்டில் பாஜக வேட்பாளர் விஜயகுமார் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த திமுகவினர் அக்கட்சியைச் சேர்ந்த 3வது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரியை தலைவராக தேர்ந்தெடுத்தனர். கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர்கள் பதவியை ராஜினாமா செய்ய தலைமை வலியுறுத்தியதை அடுத்து கடந்த மார்ச் 8ம் தேதி தலைவர் பதவியை புவனேஸ்வரி ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, கடந்த மார்ச் 26ம் தேதி புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. கலாராணி, பாஜக வார்டு உறுப்பினர் விஜயகுமார், துணைத் தலைவர் அம்மையப்பன் ஆகிய 3 பேர் மட்டுமே வந்திருந்த நிலையில் கோரம் (குறைவெண்) இல்லாததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, இரண்டாவது முறையாக புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் புலியூர் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று மீண்டும் (மே 25ம் தேதி) நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1வது வார்டு உறுப்பினரும் தலைவர் வேட்பாளருமான கலாராணி, பாஜக வார்டு உறுப்பினர் விஜயகுமார், 10வது வார்டு திமுக உறுப்பினர் ஆனந்தன் ஆகிய 3 பேர் வந்திருந்தனர். காலை 9.30 மணி முதல் 10 மணி வரையில் வேறு உறுப்பினர்கள் வராததால் கோரம் (குறைவெண்) இல்லாததால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக தணிக்கை உதவி இயக்குநர் லீலாகுமார் தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1வது வார்டு உறுப்பினரும், தலைவர் வேட்பாளருமான கலாராணி, "முதல்வர் நல்ல முடிவு எடுக்க வேண்டும். திமுக பேரூர் செயலாளரும், துணைத் தலைவருமான அம்மையப்பன், புலியூர் அவர் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என நினைக்கிறார். பொதுமக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் சுய நலத்துடன் செயல்படுகிறார். இதற்கு முழுக்க, முழுக்க அவரே காரணம்" என்று கூறியுள்ளார்.
இதனிடையே, கலாராணியின் ஆதரவாளர்கள் கலாராணி தான் தலைவராக வர வேண்டும் எனக்கூறி புலியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர்.
பாஜக சுவரொட்டி
பாஜக சார்பில் புலியூர் பேரூராட்சி அலுவலகம் முன்புறம் மற்றும் பேரூராட்சி பகுதியில் ‘ஏமாற்றும் திராவிட மாடல்’ என்ற பெயரில் கரூர் மாவட்ட பாஜக தாந்தோணி கிழக்கு ஒன்றியம் சார்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பே சுவரோட்டி ஒட்டப்பட்டுள்ளது.
அதில் புலியூர் பேரூராட்சிக்கு பட்டியலினப் பெண் தலைவரை தேர்ந்தெடுக்காமல் தேர்தலை தள்ளிப்போடும் திமுக அரசின் ஜனநாயக படுகொலை 25.5.2022 அன்று நடைபெறும் மறைமுக தேர்தலில் பேரூராட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா? என கேள்வி எழுப்பும் வாசகங்கள் இடம்பெற்று இருந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment