Published : 25 May 2022 01:23 PM
Last Updated : 25 May 2022 01:23 PM

மாதையன் மரணத்துக்கு மனிதமற்ற அரசு எந்திரம்தான் பொறுப்பேற்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: “வீரப்பனின் சகோதரர் மாதையனை விடுவிப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்று உயர் நீதிமன்றமே ஆணையிட்ட பிறகும், அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதனால் சிறுக, சிறுக கொல்லப்பட்டார். மனிதநேயமற்ற அரசு எந்திரம்தான் அவரது இறப்புக்கு பொறுப்பேற்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சந்தன கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த மாதையனை சிறைத்துறை அதிகாரிகள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். அங்கு தொடர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி மாதையன் இன்று உயிரிழந்தார்.

மாதையனின் இறப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "35 ஆண்டுகளாக சிறையில் வாடிய வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன், அவரது உடல் நல பாதிப்புக்கு சேலம் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்.

மாதையன் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. அவர் பொய்வழக்கில்தான் சிக்க வைக்கப்பட்டார். அப்போதைய சூழலும், பொதுப்புத்தியும் அவருக்கு தண்டனை பெற்றுத் தந்தன. ஆனாலும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மாதையனை 35 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்தது மனித உரிமை மீறல்.

மாதையனை விடுவிப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்று உயர் நீதிமன்றமே ஆணையிட்ட பிறகும், அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதனால் சிறுக, சிறுக கொல்லப்பட்டார். மனிதநேயமற்ற அரசு எந்திரம்தான் அவரது இறப்புக்கு பொறுப்பேற்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x