Published : 29 Jun 2014 09:41 AM
Last Updated : 29 Jun 2014 09:41 AM

காவல் நிலையங்களில் விசாரணை தனிப்பிரிவு: டிஜிபி ராமானுஜம் தகவல்

வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் வகையில் தமிழக காவல் நிலையங்களில் விசாரணை தனிப்பிரிவு விரைவில் தொடங்கப்படும் என்று டிஜிபி ராமானுஜம் தெரிவித்தார்.

தமிழக காவல்துறை 58-வது திறனாய்வு போட்டி நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா சென்னை வண்டலூர் அருகேயுள்ள காவல் பயிற்சி மையத்தில் சனிக்கிழமை நடந்தது. இதில் டிஜிபி ராமானுஜம் சிபிசிஐடி ஏடிஜிபி கரன் சின்ஹா, சிபிசிஐடி ஐஜி மகேஷ் குமார் அகர்வால், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் பங்கேற்றனர். 11 போலீஸ் சரகங்கள், 6 மாநகரங்கள், 7 சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த 115 பெண்கள் உள்பட 707 பேர் போட்டிகளில் பங்கேற்றனர். அவர்களில் 55 பேர் பதக்கங்களைப் பெற்றனர்.

பரிசுகளை வழங்கி டிஜிபி ராமானுஜம் பேசியதாவது:

இங்கே வெற்றி பெற்றவர்கள் அகில இந்திய அளவிலான திறனாய்வு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். போட்டிகளில் மட்டும் திறமையை காட்டுவது போதாது. செயல்களிலும் காட்ட வேண்டும். முக்கியமாக சட்டம்-ஒழுங்கு, குற்ற விசாரணை பணிகளில் திறமையாக செயல்பட வேண்டும். குற்றவாளிகளை கைது செய்வதில் காட்டும் வேகம், சட்ட அடிப்படையில் அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதிலும் துப்பு துலக்கும் பணிகளிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

தமிழகம் முழுவதும் காவல்துறை செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் மறுசீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். அதன்படி, அனைத்து காவல் நிலையங்களிலும் விசாரணைக்கு தனிப்பிரிவு தொடங்கப்படும். தற்போது சட்டம்-ஒழுங்கு, குற்றப் பிரிவு ஆகியவை உள்ளன. இதில் குற்றப்பிரிவு இனி விசாரணை பிரிவுக்குள் வந்துவிடும். இந்தப் பிரிவில் பணியாற்றுவோர் போலீஸ் விசாரணை, நீதிமன்ற விசாரணைகளில் மட்டுமே முழுமையாக ஈடுபடுவர்.

மேலும் தமிழகம் முழுவதும் நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் முக்கிய கொலை வழக்குகள், ஏடிஎம் கொள்ளை வழக்குகளில் விரைந்து புலனாய்வு செய்து நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு வரும் வகையில் சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு டிஜிபி ராமானுஜம் பேசினார்.

சிபிசிஐடி அதிகாரிக்கு விருது

சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்.மாரிராஜனுக்கு சிறந்த புலனாய்வு அதிகாரிக்கான விருது வழங்கப்பட்டது. மதுரையில் பால்காரர் சுரேஷ் கொலை வழக்கில் அறிவியல் ரீதியாகவும், தடய சேகரிப்பு மூலமும் துப்பு துலக்கி, நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை கைது செய்ய முயற்சி எடுத்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. மதுரை மாநகர காவல்துறையைச் சேர்ந்த மோப்ப நாய் பாண்டியன், தொடர்ந்து 6-வது ஆண்டாக இந்தப் போட்டியில் பதக்கம் பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x