Published : 29 May 2016 05:23 PM
Last Updated : 29 May 2016 05:23 PM
முதல்வர் பதவி கிடைக்காமல் ஏமாற்றமடைந்த மாநிலத்தலைவர் நமச்சிவாயத்தை அவரது வீட்டுக்குச் சென்று காங்கிரஸ் கட்சியின் மேலிடப்பொறுப்பாளர் சின்னாரெட்டி இன்று சந்தித்தார். உரிய அங்கீகாரத்தை நமச்சிவாயத்துக்கு காங்கிரஸ் கட்சி தரும். கட்சியில் குழப்பமில்லை என்று குறிப்பிட்டார்.
புதுச்சேரியில் அமைய இருக்கும் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதற்காக நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனால் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் ஆவேசம் அடைந்து சாலை மறியல், பேருந்துகள் மீது கல்வீச்சு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மாநிலத்தலைவர் நமச்சிவாயம் முக்கிய முடிவு எடுப்பதாக வதந்தி பரவியது. அதைத்தொடர்ந்து வில்லியனூரில் உள்ள கட்சித் தலைவர் நமச்சிவாயத்தின் வீட்டுக்கு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சின்னா ரெட்டி நேரில் சந்தித்து சமாதானப்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சின்னா ரெட்டி கூறியதாவது:
''புதுச்சேரியில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை கட்சித் தலைவர் நமச்சிவாயமும், காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் நாராயணசாமியும், துணைநிலை ஆளுநரிடம் அளிப்பார்கள். கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தவுடன் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள்.
கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி, பொதுச் செயலாளருடன் அமைச்சரவை குறித்து நாராயணசாமி கலந்து பேசி அனுமதி பெறுவார்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு நமச்சிவாயம் உழைத்தார். அதைக் கட்சித் தலைமை நன்கு அறியும். அவருக்கு உரிய அங்கீகாரத்தை கட்சி மேலிடம் அளிக்கும். காங்கிரஸ் அரசு பதவி ஏற்கும் தேதி குறித்து மாநில தலைவர் நமச்சிவாயம் முடிவு செய்வார். அவர் செய்த சேவைகளை கட்சி மறந்து விடாது. அவரது பலத்தையும் அறிந்துள்ளோம். காங்கிரஸ் கட்சி எப்போதும் நமச்சிவாயத்துக்கு உரிய மரியாதையை தரும்
கிரண்பேடியை ஆளுநராக நியமிக்க மத்திய பாஜக அரசுக்கு உரிமை உள்ளது. ஆளுநர் அவருக்கு உள்ள வழிமுறைகளின்படி செயல்படுவார். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவர்களுக்கு உள்ள வழிமுறைகளின்படி செயல்படுவர். இதில் எங்கே மோதல் ஏற்படும்? என்று கேள்வி எழுப்பினார்.
முன்னதாக இவ்விவகாரம் தொடர்பாக நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, "நான் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பேன். என்னைப்பற்றி பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். நான் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பேன்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT