Published : 04 May 2016 08:56 AM
Last Updated : 04 May 2016 08:56 AM

தமிழகம் முழுவதும் சிறைகளில் உள்ள 15 ஆயிரம் கைதிகளில் வெறும் 86 பேருக்கு மட்டும்தான் ஓட்டுரிமை

கைதிகளின் உரிமை பறிக்கப்படுவதாக வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு

*

தமிழகம் முழுவதும் சிறைகளில் உள்ள 15 ஆயிரம் கைதிகளில் இந்தமுறை தடுப்புக் காவலில் உள்ள வெறும் 86 பேருக்கு மட்டும் தான் ஓட்டுரிமை அளிக்கப்பட்டுள்ள தாகவும், குறைந்தபட்சம் விசா ரணை மற்றும் நீதிமன்ற காவலில் உள்ள கைதிகளுக்காவது ஓட்டுரிமை அளிக்க வேண்டும் என குரல் கொடுக்கின்றனர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்.

தமிழகத்தில் சென்னை புழல், வேலூர், திருச்சி, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, கடலூர், சேலம் ஆகிய இடங்களில் 9 மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. இவை தவிர, 100க்கும் மேற்பட்ட துணைச் சிறைச்சாலைகள் உள்ளன.

இந்த சிறைகளில் தற்போது 700 பெண் கைதிகள் உட்பட 15 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் 5 ஆயிரம் பேர் தண் டனை சிறைவாசிகள். 2 ஆயிரத்து 500 பேர் நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ள சிறைவாசி கள். 5 ஆயிரத்து 500 பேர் நீதிமன்றக் காவலில் உள்ள சிறைவாசிகள். 2 ஆயிரம் பேர் குண்டர் தடுப்புச் சட்டம், பூட்-லாக்கர் சட்டம், உணவுப்பொருள் பதுக்கல் சட்டம் போன்றவற்றில் கைது செய்யப் பட்டு தமிழகம் முழுவதும் தடுப்புக் காவலில் உள்ளவர்கள். தவிர, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீ்ழ் 15 பேரும், காபிபோசாவின் கீழ் 10 பேரும், இதர குற்றங்களின் கீழ் 8 பேரும் சிறைகளில் கைதிகளாக உள்ளனர்.

இந்த கைதிகளில் தமிழகம் முழுவதும் தடுப்புக் காவலில் உள்ள 86 கைதிகளுக்கு மட்டுமே இந்த முறை ஓட்டுரிமை அளிக்கப் பட்டுள்ளதாக கூறும் வழக்கறிஞர் கள், சிறைகளில் உள்ள கைதி களின் ஓட்டுரிமையை தட்டிப் பறிப்பது அவர்களின் ஜனநாயக உரிமையை பறிப்பதற்கு சமம், என்கின்றனர்.

சென்னை உயர் நீதிமன்ற வழக் கறிஞர் எஸ்.ரஜினிகாந்த் கூறும் போது, ‘‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தடுப்புக் காவலில் உள்ள கைதிகளுக்கு மட்டுமே வாக் குரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இது அடிப்படையிலேயே முரண் பாடானது. அரசியலமைப்பு சட்டப் பிரிவு 14-ன் படி ஒவ்வொரு இந்திய குடிமகனும் சமமாக பாவிக்கப்பட வேண்டும். தண்டனை, விசா ரணை மற்றும் நீதிமன்றக் காவலில் உள்ள கைதிகளுக்கு ஓட்டுரிமையைப் பறிப்பது அவர்களின் ஜனநாயக கடமைக்கு முரண்பாடானது. அரசியல் உரிமை எல்லோருக்கும் உண்டு. தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டாலோ, அல்லது ஜாமீனில் வெளிவந்தாலோ அவர் களுக்கு வாக்குரிமை அளிக்கப் படும் போது, சிறைக்குள் இருக்கும்போது அவர்களின் வாக்குரிமையை தட்டிப் பறிப்பது எந்த வகையிலும் நியாயமில்லாத ஒன்று’’ என்கிறார்.

மதுரை உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர் ஆர்.அழகுமணி கூறும்போது, ‘‘தமிழகம் முழு வதும் தடுப்புக் காவலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களில் வெறும் 86 கைதிகளுக்கு மட்டும்தான் இந்தமுறை ஓட்டுப்போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கைதிகளின் வாக்காளர் அடையாள அட்டை முகவரியும், அவர்கள் சிறையி்ல் கொடுத்த முகவரியும் ஒன்றாக இருந்தால் மட்டும்தான் ஓட்டுரிமை வழங்கப்படுகிறது.

3 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை பெற்றவர்கள் தேர்த லிலேயே போட்டியிட்டு அமைச் சராக முடியும், முதல்வராக முடியும் என சட்டவிதிகள் இருக்கும்போது, 3 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை பெற்ற கைதிகளை, விசாரணை கைதிகளை, நீதிமன்றக் காவலில் உள்ளவர்களை ஓட்டுப்போட ஏன் அனுமதிக்கக்கூடாது?’’ என்றார்.

சென்னை உயர் நீதிமன்ற இளம் வழக்கறிஞர் ராஜலட்சுமி கூறும்போது, ‘‘நீதிமன்றம் குற்றவாளி என தீர்மானித்து தண்டனை வழங்கியிருந்தால் மட்டுமே அவர்களது வாக்குரிமை சட்டப்படி ரத்தாகும். ஆனால், 6 மாதம் தண்டனை பெற்றவர்களும், விசாரணை கைதிகளும், நாளைக்கே விடுதலை செய்யப்படலாம். அல்லது ஜாமீனில் வெளிவரலாம். அப்படியிருக்கும்போது அவர்களின் வாக்குரிமையை தட்டிப் பறிப்பது தவறு. அவர்களும் இந்நாட்டின் குடிமகன்கள் தான். அவர்களுக்கும் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற உரிமை உள்ளது. 100 சதவீதம் ஜனநாயக கடமையாற்றுவோம் என பிரச்சாரம் செய்யும் தேர்தல் ஆணையமும், சிறைத்துறை நிர்வாகமும் சிறைக்குள் இருக்கும் தகுதியான வாக்காளர்களை கட்டாயம் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x