Published : 24 May 2022 10:21 PM
Last Updated : 24 May 2022 10:21 PM
சென்னை: வெளிப்படைத்தன்மையடன் மருத்துவர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை கீழ்பாக்கத்தில் நடைபெற்ற மருத்துவர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்தவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆணைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் "முதல்வர் தலைமையில் இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பணி மாறுதல் என்பது மிகுந்த வெளிப்படைத் தன்மையோடு நடந்து வருகிறது.
கடந்த ஓராண்டாக 14,156 பணி மாறுதல்கள் மருத்துவக் கல்வி இயக்குனரகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, இந்திய மருத்துவம் ஆகிய துறைகளில் மிகச் சிறப்பாக அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பணி மாறுதல்கள் நடைபெற்றுள்ளது. இவர்களில் மருத்துவர்கள் 3,585, செவிலியர்கள் 10,847, மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் 324 பணி மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் நேற்று முதல் 1,008 மருத்துவர்களுக்கான கலந்தாய்வு வெளிப்படைத் தன்மையோடு நடைபெற்று வருகிறது. மருத்துவர்கள் இந்த கலந்தாய்வில் அவர்களின் விருப்பத்தின் பேரில் மிகுந்த மகிழ்ச்சியோடு மனச்சுமையை போக்குகிற வகையில் பணி மாறுதல்களை பெற்றிருக்கின்றனர்.
இந்தப் பணி மாறுதல்கள் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படைத் தன்மையோடு நடைபெற்று வருகிறது. மருத்துவத்துறையில் பல்வேறு மருத்துவ சங்கங்கள் இருந்தாலும் ஒரே நேரத்தில் மிகப்பெரிய அளவுக்கு பணி மாறுதல்கள் நடைபெற்று வருவதை அறிந்து சமூக வலைத்தளங்களில் மருத்துவ சங்கங்கள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
பேரிடர் காலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை காக்க மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றிவந்த மருத்துவர்களுக்கு ஒரு பரிசு என்கிற வகையில் இந்த பணி மாறுதல்கள் அமைந்துள்ளன. இப்போது நடைபெறுகின்ற பணி மாறுதல்களை நானும் மருத்துவத் துறையின் செயலாளர் மற்றும் மருத்துவ அலுவலர்கள் நேரில் பார்க்கிற போது ஒவ்வொரு மருத்துவரும் தாங்கள் கேட்கிற இடம் கிடைக்கிறது என்கிறபோது மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகின்றனர். இதுவே எதிர்காலத்தில் இந்த மருத்துவத்துறையில் மிகுந்த ஈடுபாட்டுடன் உழைப்பதற்கு உந்துதலாக அமையும்.
அதேபோன்று பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் 1000 இடங்களுக்கு மருத்துவர் செவிலியர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ஜூன் முதல் வாரத்தில் பணி மாறுதல்கள் நடைபெற உள்ளது. இத்துறையில் 47 வகையான மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு பணி மாறுதல் என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. ஆனால் தற்போது வெளிப்படைத் தன்மையோடு நடைபெற உள்ளது.
இத்துறையில் மருத்துவர் காலியிடங்கள் 1021, 18 வகையான சுகாதாரப் பணியாளர்கள் ஆக மொத்தம் 4,308 இடங்கள் காலியாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி கடந்த நிதிநிலை அறிக்கையில் அவை மருத்துவ தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் இந்த காலிப்பணியிடங்கள் மிகுந்த வெளிப்படைத் தன்மையோடு பூர்த்தி செய்ய மருத்துவ தேர்வு வாரியம் பத்திரிகைகளில் செய்தி வெளியிடுவது, தேர்வு வாரிய இணையதளங்களில் செய்தி வெளியிடுவது, சான்றிதழ் சரிபார்ப்பு, போன்றவற்றிற்கு 4 மாத காலம் அவகாசம் கேட்டிருக்கிறார்கள். எனவே வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் மேற்கண்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT