Published : 24 May 2022 07:48 PM
Last Updated : 24 May 2022 07:48 PM

“உண்மையான ஆன்மிகவாதிகள் எனில், திமுக அரசை ஆதரித்திருக்க வேண்டும்” - சேலத்தில் ஸ்டாலின் பேச்சு

சேலம்: “உண்மையான ஆன்மிகவாதிகள் என்றால், நியாயமாக திமுக அரசின் செயல்பாடுகளை ஆதரித்திருக்க வேண்டும்” என்று இந்து சமய அறநிலையத் துறையின் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற, "ஓயாத உழைப்பின் ஓராண்டு" என்ற தலைப்பிலான அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியது: "இந்த மேடைக்கு வரும்போது கருப்பும் சிவப்பும் பட்டொளி வீசிப் பறந்துகொண்டு இருந்தது. கருப்பும் சிவப்புமான அந்த இருவண்ணக் கொடிதான் நம்முடைய அடையாளம். அரசியல், பொருளாதார, சமுதாய வாழ்விலுள்ள இருண்ட நிலையை உணர்த்தி நிற்பதுதான் கருப்பு. அந்த மூன்று துறைகளிலும் உள்ள இருண்ட நிலையைப் போக்கி ஒளிநிலையை உண்டாக்க வேண்டும் என்பதன் அடையாளமே சிவப்பு என்று அந்தக் கொடியை உருவாக்கியபோது பேரறிஞர் அண்ணா சொன்னார். கடந்த ஆண்டு மே மாதம் 7-ஆம் நாள் தமிழகத்தின் இருண்ட வானில் ஒளிரும் சூரியனாக உதயசூரியன் ஆட்சி உருவானது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது எனக்கு ஒருவிதமான தயக்கம் இருந்தது. அந்த தயக்கத்துக்கு என்ன காரணம் என்றால், பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பாதாளத்துக்குப் சென்றுவிட்டது; இதை உடனடியாக ஓராண்டு காலத்தில் சீர்செய்ய முடியுமா என்று நான் யோசித்துக் கொண்டே இருந்தேன். தமிழ்நாட்டின் நிதிநிலைமை என்பது மிகமிகக் கவலைக்கிடமாக இருந்தது. ஆறு லட்சம் கோடி ரூபாய்க் கடனில் தமிழ்நாடு தத்தளித்துக்கொண்டு இருந்தது. இந்த நிதி நெருக்கடியில் இருந்து உடனடியாக மீள முடியுமா என்று நான் யோசித்தேன். இவைதான் என் மனதில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்த தயக்கங்கள். ஆனால், இன்று தமிழ்நாட்டைத் தலைநிமிர வைத்திருக்கிறோம் என்பதை நான் தலைநிமிர்ந்து சொல்கிறேன்.

இந்த ஓராண்டு காலம் என்பது மிகப்பெரிய நம்பிக்கையை எனக்குக் கொடுத்திருக்கிறது. தமிழகத்தைத் தலைசிறந்தத் தமிழ்நாடாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உருவாகியிருக்கிறது. இந்தியாவில் சிறந்த மாநிலமாக மட்டுமல்ல - அனைத்து வளங்களும் கொண்ட மாநிலமாக விரைவில் ஆக்க முடியும் என்ற நம்பிக்கையை எனக்குக் கொடுத்திருக்கிறது.

இந்த ஆட்சிமீது நியாயமான எதை வைத்தும் குறைசொல்ல முடியாத சிலர், இன்றைக்கு எதை கையில் எடுத்திருக்கிறார்கள் என்றால், ஆன்மிகத்தின் பெயரால் குறை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். எவரது பக்திக்கும், எவரது உணர்வுக்கும் தடையாக திராவிட முன்னேற்றக் கழக அரசு இருந்ததும் இல்லை, இனியும் இருக்காது.

‘பக்திப் பிரச்சாரம் ஒரு பக்கம் நடக்கட்டும் – அதேபோல் பகுத்தறிவுப் பிரச்சாரம் அதுவாகத் தொடரட்டும்' என்பதுதான் தலைவர் கருணாநிதி நமக்குக் காட்டிய பாதை. ஆட்சி என்பது அனைவருக்கும் பொதுவானது. எல்லாத் துறையும் வளர வேண்டும் என்று நான் சொல்லி வருகிறேன். இதில் இந்து சமய அறநிலையத்துறையும் ஒன்று. அந்தத் துறையையும் உள்ளடக்கிய ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. நான் பெருமையோடு சொல்கிறேன்,

2500 கோடி ரூபாய் மதிப்பிலான திருக்கோயில் சொத்துக்கள் திமுக ஆட்சியில்தான் மீட்கப்பட்டிருக்கிறது; திருக்கோயில் நிலங்களின் ஆவணங்கள் அனைத்தையும் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறோம்; கோயில் பணியாளர்கள் அனைவருக்கும் 4000 ஆயிரம் ரூபாய் பணமும், அரிசி, மளிகைப் பொருட்களும் கொடுத்திருக்கிறோம்; அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் திமுக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டிருக்கிறது; அன்னைத் தமிழில் வழிபாடு நடத்த உத்தரவிட்டிருக்கிறோம்.

12 இறைவன் போற்றி பாடல் புத்தகங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது; தல மரக்கன்றுகளை நட்டு வருகிறோம்; ஒரு காலபூசைத் திட்டத்தின்கீழ் 9 ஆயிரம் அர்ச்சகர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குகிறோம்; தலைமுடி திருத்தும் பணியாளர்களுக்கு மாதம் 5 ஆயிரம் வழங்குகிறோம்; ஒரு கால பூசை செய்யும் கோயில்களுக்கு வழங்கப்படும் மானியத்தை 1 லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி, 12,959 கோயில்களுக்கு மானியம் வழங்கப்பட்டிருக்கிறது.

அறநிலையத்துறை சார்பில் 10 கலைக் கல்லூரிகள் உருவாக்கப்போகிறோம்; கோயில் மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகள் இலவசமாகத் திருமணம் செய்ய சலுகை தரப்பட்டிருக்கிறது; திருக்கோயில் நிரந்தரப் பணியாளர்களுக்கு, 17 விழுக்காட்டில் இருந்து 31 விழுக்காடாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டிருக்கிறது; திருக்கோயில் பணியாளர்களுக்குப் பொங்கல் கருணைத் தொகை தரப்பட்டிருக்கிறது; ஆணையர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது; 81 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டிருக்கிறது. எனது தலைமையில் ஒரு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் கடந்த ஓராண்டு காலத்தில் இந்து சமய அறநிலையத் துறையில் மட்டும் செய்யப்பட்ட பணிகள். சாதனைகள்.

உண்மையான ஆன்மிகவாதிகள் என்றால், நியாயமாக நீங்கள் இதை ஆதரித்திருக்க வேண்டும். அதற்கு நேர் மாறாக மதத்தை வைத்து, மதவெறியைத் தூண்டி அரசியல் செய்யும் நிலையில் இருக்கிறவர்கள், இதைத் திசை திருப்புகிறார்கள். பொய்யான அவதூறுகளைச் சொல்லி ஆட்சியின் மீது அவதூறுகளைப் பரப்புகிறார்கள்.

இந்த அவதூறுகளை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நான் எனது இலக்கை நோக்கி நடந்துகொண்டு இருக்கிறேன். யாருக்கும் பதில் சொல்லி நான் என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவே எனக்கு நேரம் போதவில்லை. அவர்களுக்கு பதில் சொல்வதற்கு எனக்கு எங்கு நேரம் இருக்கிறது?

எடப்பாடி பழனிசாமி மீது தாக்கு:

இன்றைக்கு தினந்தோறும் எடப்பாடி பழனிசாமி இந்த ஆட்சியைக் குறைசொல்லி அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார். அறிக்கை விடக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால், தான் ஆட்சியில் இருந்த காலத்தில் அவர் இந்த மாவட்டத்திற்கு எதையாவது செய்திருக்கிறாரா? இதுதான் என்னுடைய கேள்வி.

அவரது ஆட்சியில் நடந்த பெரும் சாதனைகள் எது என்றால், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை; தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு; கொடநாடு கொலை – கொள்ளை. இவைதான் அவரது ஆட்சியின் வேதனையான சாதனைகள்.

ஆனால் ஓராண்டு காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்த சாதனைகள் என்பவை பத்தாண்டு காலத்தில் செய்யக் கூடிய அளவிலான சாதனைகளை நாம் இன்றைக்கு செய்திருக்கிறோம் என்பதை நான் நெஞ்சை நிமிர்த்தி கூறுகிறேன். இந்த சேலம் மாவட்டத்துக்குச் செய்த சாதனைகளைச் சொல்வதற்கே நேரம் போதாது” என்று அவர் பட்டியலிட்டுப் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x