Published : 24 May 2022 03:27 PM
Last Updated : 24 May 2022 03:27 PM
சென்னை: ராமநாதபுரம் இளைய மன்னரும் ராமேஸ்வரம் கோயில் தக்காருமான ராஜா என்.குமரன் சேதுபதி இன்று காலை மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மற்றும் வி.கே.சசிகலா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: ராமநாதபுரம் இளைய மன்னரும் ராமேஸ்வரம் கோயில் தக்காருமான ராஜா நாகேந்திர குமரன் சேதுபதி இன்று காலை மாரடைப்பால் காலமான செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். திருக்கோயில், கல்விநிறுவனப் பொறுப்புகளில் சிறப்பாகச் சேவையாற்றி வந்த அவரது இந்த திடீர் இறப்பு ஈடுசெய்ய முடியாததாகும்.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓபிஎஸ் - இபிஎஸ்: "ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னரும், ராமேஸ்வரம் திருக்கோயில் அறங்காவலருமான ராஜா என். குமரன் சேதுபதி மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.
குமரன் சேதுபதி ராமேஸ்வரம் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர், அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர், ராமநாதபுரம் மாவட்ட கால்பந்து சங்கத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த பெருந்தகையாளர்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவர்மீது பேரன்பு கொண்டிருந்தோர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
டிடிவி தினகரன்: ராமநாதபுரம் மன்னரும் ராமேஸ்வரம் கோயில் அறங்காவலருமான ராஜா N.குமரன் சேதுபதி காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அவரது மறைவால் வாடும் ராஜ குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
வி.கே.சசிகலா: ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னரும், ராமேஸ்வரம் திருக்கோயிலின் தக்காருமான ராஜா N. குமரன் சேதுபதி இன்று காலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரமடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு தலைவர்கள் பலரும் இரங்கலைப் பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment