Published : 24 May 2022 03:06 PM
Last Updated : 24 May 2022 03:06 PM
விருதுநகர்: பெட்ரோல், டீசலுக்கான வரியை தமிழக அரசு குறைக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் தெரிவித்தார்.
இதுகுறித்து விருதுநகரில் அவர் அளித்த பேட்டியில், "கட்சியில் மூத்த உறுப்பினர்களுக்கும் கடமை உணர்ச்சியோடு பணியாற்றுவோருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி பாஜக. திமுக உள்ளிட்ட கட்சிகளை போல பிறப்பின் அடிப்படையில் இல்லாமல் உழைப்பின் அடிப்படையில் பொறுப்புகளை கொடுப்பது பாஜக.
பெட்ரோல் மற்றும் டீசல் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த வரிச்சுமை முழுவதையும் மத்திய அரசே ஏற்கிறது. ஆனாலும் மாநில அரசுக்கான நிதிப் பங்கீடு குறைக்கப்படவில்லை. ஆனால் கேரளா, ராஜஸ்தான், ஒடிசா போன்ற மாநிலங்களில் பெட்ரோல் டீசலுக்கான வரியை அம்மாநில அரசுகள் குறைத்துள்ளன. ஆனால் தமிழகத்தில் திமுக அரசு பெட்ரோல் டீசலுக்கான மாநில வரியை குறைக்கவில்லை.
தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததைப்போல பெட்ரோல், டீசலுக்கான வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும். இல்லையெனில் பாஜக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இரு இலக்கத்தில் பாஜக வெற்றி பெறும். அத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வருமா என்று தேசிய தலைமை முடிவு செய்து அறிவிக்கும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டும் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றுகிறது. 4 எம்எல்ஏக்கள் இருந்தாலும் சட்டமன்றத்தில் பாஜகதான் பிரதான எதிர்க்கட்சி போல் செயல்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை போல் சமையல் சிலிண்டர் விலையையும் குறைக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.
தமிழகத்தில் ரூ.13 ஆயிரம் கோடியில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கிவைக்க தமிழகம் வரும் பிரதமரை வரவேற்கிறோம். "கோ பேக் மோடி" என தைரியம் இருந்தால் திமுகவினர் சொல்லிப் பாருங்கள்.
பேரறிவாளன் விடுதலையை பாஜக ஏற்கவில்லை. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கிறோம். பேரறிவாளனுக்கு மட்டும் நீதியா? ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது அவருடன் உயிரிழந்த மற்றவர்களின் குடும்பத்தினருக்கு நீதி இல்லையா? மேலும் 6 பேரின் விடுதலை குறித்த திமுகவின் நிலைப்பாட்டையும் நாங்கள் எதிர்க்கிறோம்" என்றார்.
பேட்டியின் போது பாஜக விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ், மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT