Published : 24 May 2022 12:54 PM
Last Updated : 24 May 2022 12:54 PM
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு 10-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி கி.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்களாகக் கொண்டு மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது.
வேட்பாளர் அல்லது அவருடைய பெயரை முன்மொழிபவர்களில் எவரேனும் ஒருவர், முனைவர் கி. சீனிவாசன், தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் செயலாளர், சட்டமன்றப் பேரவைச் செயலகம் அவர்களிடம் அல்லது கே.ரமேஷ், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் துணைச் செயலாளர், சட்டமன்றப் பேரவைச் செயலகம் ஆகியோரிடம் சட்டமன்றப் பேரவைச் செயலகத்திலுள்ள அலுவலகத்தில் எந்நாளிலும், (முறையே வங்கி விடுமுறை மற்றும் பொது விடுமுறை நாட்களான 28.05.2022 மற்றும் 29.05.2022 நீங்கலாக) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள்ளாக 31.05.2022-ம் நாளுக்கு மேற்படாதவாறு வேட்பு மனுக்களை அளிக்கலாம்.
வேட்பு மனுக்கள், சட்டமன்றப் பேரவைச் செயலக செயலாளர் அலுவலகத்தில் 01.06.2022 ம் நாளன்று காலை 11 மணியளவில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
வேட்பாளர் விலகலுக்கான அறிவிப்பை, வேட்பாளர் அல்லது அவரது பெயரை முன்மொழிபவர்களில் ஒருவர் அல்லது வேட்பாளரால் எழுத்து மூலம் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அவரது தேர்தல் முகவர், தேர்தல் நடத்தும் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் 03.06.2022ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் அளிக்கலாம்.
தேர்தலில் போட்டி இருப்பின், 10.06.2022-ம் நாளன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில், தலைமைச் செயலகப் பிரதானக் கட்டடத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள சட்டமன்றப் பேரவை குழுக்கள் கூடும் அறையில் வாக்குப் பதிவு நடைபெறும்" என்று அந்த அறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT