Published : 24 May 2022 07:46 AM
Last Updated : 24 May 2022 07:46 AM

திருமானூர் அருகே சாலையோர மரத்தில் கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே சாத்தமங்கலம் பகுதியில் நேற்று சாலையோர புளியமரத்தில் மோதி உருக்குலைந்து கிடக்கும் கார்.

அரியலூர்: சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(45). இவர், சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி லட்சுமிபிரியா(36) சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.

இந்நிலையில், கார்த்திகேயன் தனது மனைவி லட்சுமிபிரியா, தாய் மஞ்சுளா(62), மகள்கள் மித்ரா(13), யாஷினி(8) ஆகியோருடன் காரில் ராமேசுவரத்துக்குச் சென்றுவிட்டு,நேற்று ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். காரை கார்த்திகேயன் ஓட்டினார்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள சாத்தமங்கலம் பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்பாராத விதமாக சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த கார்த்திகேயன், லட்சுமிபிரியா, மஞ்சுளா ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மித்ரா, யாஷினி ஆகியோரை கீழப்பழுவூர் போலீஸார் மீட்டு, திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அதில், வழியில் யாஷினி உயிரிழந்தார். மித்ராவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இறந்தவர்களின் உடல்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x