Published : 25 May 2016 03:00 PM
Last Updated : 25 May 2016 03:00 PM
நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அனைத்து தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியும், புதிதாகப் பொறுப்பேற்ற அமைச்சரவையில் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட அதிமுக தலைமை இடம் அளிக்காதது குறித்து இந்த மாவட்டங்களின் மக்கள் மிகுந்த மன வேதனையடைந்துள்ளனர்.
திருச்சியிலிருந்து சில பகுதிகளைப் பிரித்து 1995-ல் பெரம்பலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர், பெரம்பலூரிலிருந்து சில பகுதிகளைப் பிரித்து 2007-ல் அரியலூர் மாவட்டம் உருவானது. இந்த 2 மாவட்டங்களிலும் மொத்தம் சுமார் 15 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
இந்த மாவட்டங்களில் நிலக்கரி, ஜிப்சம், கால்சியம், கருங்கல் என கனிம வளங்கள் ஏராளமாக உள்ளன. தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையிலான சிமென்ட் ஆலைகள் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளன. பெரம்பலூர் விவசாயம் சார்ந்த தொழில் வளம் நிறைந்த மாவட்டம். மக்காச் சோளம், பருத்தி, வெங்காயம் ஆகிய பயிர்கள் உற்பத்தியில் இம்மாவட்டம் தமிழகத்தில் முன்னணி வகிக்கிறது.
இத்தனை சிறப்புகள் இருந்தும் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது, இம்மாவட்டங்கள் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளன. இந்த மாவட்டங்களை முன்னேற்றும் வகையில் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற குரல் இப்போது ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
இதுகுறித்து அரியலூர் மாவட்ட வளர்ச்சிக் குழுத் தலைவரான சீனி.பாலகிருஷ்ணன் கூறியபோது, “பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்தமுறை இந்த மாவட்டத்தில் தலா ஒரு தொகுதியை திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் பங்கு போட்டுக்கொண்டன.
ஆனால், இம்முறை 2 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றி பெரம்பலூர் மாவட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் கடந்த முறை இந்த தொகுதிகளில் தலா ஒன்றைக் கைப்பற்றின. ஆனால், இம்முறை இந்த மாவட்டத்திலுள்ள 2 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றி உள்ளது.
அதிமுகவுக்கு பலம் கூட்டிய இந்த 2 மாவட்டங்களும், புதிய அமைச்சரவையில் இடமளிக்கப் படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன. புதிதாக உருவான திருப்பூர் மாவட்டத்துக்குகூட அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், வளங்கள் பல நிறைந்த, வளர்ச்சியில் பின்தங்கிய இந்த மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படாதது துரதிருஷ்டவசமானது” என்றார்.
தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் கூறியபோது, “பெரம்பலூர், அரியலூர் போன்ற பின் தங்கிய மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் கட்டாயம் பிரதிநிதித்துவம் வழங்க வேண் டும். அதுவும் அதிகாரம் நிறைந்த துறைகளுக்கு அமைச்சராக நியமிக்க வேண்டும். அப்போதுதான் பின்தங்கிய மாவட்டத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்களையும், கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்க முடியும்.
இல்லையெனில் பின் தங்கிய மாவட்டங்கள் மேலும், பின்னடைவைச் சந்திக்க நேரிடும்.
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் உருவான பிறகு திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட இதுவரை அமைச்சரவையில் இடம் தரவில்லை. பின் தங்கிய இந்த மாவட்டங்களின் வளர்ச்சிக்கான திட்டங்களைச் செயல்படுத்தக்கூடிய ஒருவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்க வேண்டும் என இந்த மாவட்டங்களின் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT