Published : 17 Jun 2014 09:01 AM
Last Updated : 17 Jun 2014 09:01 AM

கும்பகோணம் தீ விபத்து சம்பவம்: நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு

கும்பகோணம் பள்ளி தீ விபத்து தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கும்பகோணம் பள்ளி தீ விபத்தால் பாதிக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கே.இன்பராஜ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி கும்பகோணம் கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் நடந்த தீ விபத்தில் எனது இரண்டு மகன்கள் உள்பட 92 பேர் உயிரிழந்தனர். மற்ற 14 மாணவர்கள் கடுமையாக தீக்காயம் அடைந்தனர்.

இந்நிலையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம் என்பது போதுமானது அல்ல என்பதால், போதிய அளவில் கூடுதல் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும், இதற்காக ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் கோரி வழக்கு தொடர்ந்தேன்.

எனது மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.சண்முகம் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது. தனி நீதிபதி அளித்த இந்த உத்தரவை எதிர்த்து அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. எனினும் அந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுடி செய்த உயர் நீதிமன்றம், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது.

எனினும் அதன் பிறகும் கூட நீதிமன்ற உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை. ஆகவே, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கான நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என்று இன்பராஜ் தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.தமிழரசன் ஆஜராகி வாதிட்டார். இந்த மனு மீதான விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு (நாளைக்கு) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x