Published : 23 May 2022 05:11 PM
Last Updated : 23 May 2022 05:11 PM
சென்னை: சிஎஸ்ஆர் நிதி உள்ளிட்ட பல்வேறு நிதிகளைக் கொண்டு ரூ.1,500 கோடி செலவில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளை மேம்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் 13 மேல்நிலை, 5 உயர் நிலை, ஒரு நடுநிலை மற்றும் 10 தொடக்கப் பள்ளி என்று மொத்தம் 28 பள்ளிகளில் பிரான்ஸ் பன்னாட்டு முகமை நிதியுதவியுடன் சிட்டீஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், பள்ளி வளாகத்தை மேம்படுத்துவது, டிஜிட்டல் மயாக்குவது, தகவல் தொடர்பை மேம்படுத்துவது போன்ற முன்மாதிரி பள்ளியாக மாற்றப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினால் 20,000 மாணவர்கள் பயன்பெற உள்ளனர். அதேபோல், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 22 பள்ளிகளை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த, பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியை பெற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இது குறித்து பிரான்ஸ் நாட்டு துாதரகம் சார்பில், அந்நாட்டின் 7 நிறுவன அதிகாரிகளுடன் கடந்த வாரம் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, சிட்டீஸ் திட்டத்தில் செய்யப்பட்டு வரும் உட்கட்டமைப்பு பணிகள் குறித்து, அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், சி.எஸ்.ஆர்., எனப்படும் பெறுநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் மாநகராட்சிப் பள்ளிகளை மேம்படுத்த உதவும்படி, அந்நிறுவனங்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி கிடைத்தால் சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ளி பள்ளிகளை ரூ.1,500 கோடி செலவில் மேம்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சிஎஸ்ஆர் நிதியுடன், தமிழக அரசு நிதி உள்ளிட்ட பல்வேறு நிதிகளை கொண்டு பள்ளிகளை மேம்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. 2-வது மற்றும் 3-வது கட்டங்களில் இந்தப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி முதல் கட்டத்தில் ரூ.92 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது.
2-வது கட்டத்தில் ரூ.102 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ரூ.50 கோடி தமிழக அரசு நிதியாகும். மீதத் தொகை சிஎஸ்ஆர் நிதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதில் கட்டிடங்களை மேம்படுத்த ரூ. 71.57 கோடி, டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் ஏற்படுத்த ரூ.10.11 கோடி, தொடக்க நிலை கல்விக்கு ரூ.6.46 கோடி, ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்த ரூ.5.56 கோடி, விளையாட்டு உள்ளிட்ட மற்ற கல்வி சாராத பணிகளுக்கு ரூ.3.49 கோடி என்று திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.
3-வது கட்டத்தில் ரூ.1,432 கோடிக்கு திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் கட்டிடங்களை மேம்படுத்த ரூ. 1,035.62 கோடி, டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் ஏற்படுத்த ரூ.249.01 கோடி, தொடக்க நிலை கல்விக்கு ரூ.4.12 கோடி, ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்த ரூ.19.44 கோடி, விளையாட்டு உள்ளிட்ட மற்ற கல்வி சாராத பணிகளுக்கு ரூ.83.48 கோடி என்று திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment