Published : 23 May 2022 04:00 PM
Last Updated : 23 May 2022 04:00 PM

உங்கள் குரல் - தெருவிழா @ கோவில்பட்டி | "சேதமான சாலைகள் அனைத்தும் விரைவில் சீரமைக்கப்படும்" 

கோவில்பட்டி நகராட்சி யில் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் ஓராண்டுக்குள் தீர்க்கப்
படும் என்று, ‘இந்து தமிழ் திசை’ நடத்திய ‘உங்கள் குரல் - தெரு விழா’ நிகழ்ச் சியில் நகராட்சித் தலைவர் கா.கருணாநிதி உறுதியளித்தார் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் நிலவும் பொதுப்பிரச்சினைகளை அந்தந்த பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண வாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘உங்கள் குரல் - தெருவிழா’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. கோவில்பட்டி நகராட்சியில் உள்ள ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று ‘உங்கள் குரல் - தெரு விழா’ நிகழ்ச்சி நடந்தது. கோவில்பட்டி நகராட்சி பகுதி மக்கள் ‘இந்து தமிழ் திசை’யின் ‘உங்கள் குரல்’ வழியாக எழுப்பிய கேள்விகளுக்கு நகராட்சித் தலைவர் கா.கருணாநிதி பதில் அளித்தார்.

வாசகர்கள் எழுப்பிய கேள்விகள் விவரம்:

சண்முகசுந்தரம்: கோவில்பட்டி நகர்மன்ற அலுவலகத்துக்கு பூங்கா சாலையில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு, அங்கு இயங்கி வருகிறது. அதன் பழைய கட்டிடம் புதுரோட்டில் உள்ளது. வருங்காலத்தில் மாநகராட்சியாக மாறும்பட்சத்தில், அதனை மண்டல அலுவலகமாக செயல்படுத்த வேண்டும்.

ராஜகோபால் (நகரத் தலைவர், தமாகா) : கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கம் தினசரி சந்தை புதுப்பிக்கப்பட உள்ளது. நகர்மன்ற ஆணையர் வீட்டுக்கு அருகே உள்ள குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான வீடுகளை இடிக்க உள்ளனர். அந்த இடத்தில் தற்காலிக சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகன்: வண்ணார் ஊருணி, சொக்கன் ஊருணி, வீரவாஞ்சி நகரில் உள்ள நரியூத்து ஊருணி ஆகியவற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றி, நீர்மட்டம் உயர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுப்பிரமணியன்: கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் இருந்த 50-க்கும் மேற்பட்ட சிறுநீர் கழிப்பிடங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. பெரியவர்கள், நோயாளிகள் இயற்கை உபாதைகள் கழிக்கும் வகையில், ஆங்காங்கே நவீன வசதிகளுடன் கூடிய இ-டாய்லெட் வசதியை செயல்படுத்த வேண்டும்.

எல்.சிங்கராஜ்: கோவில்பட்டி நகராட்சி 9-வது வார்டு திருமங்கை நகர் 1-வது தெருவில் புது குடிநீர் குழாய்கள் அமைக்க குழி தோண்டப்பட்டு ஓராண்டாகியும் குழாய்கள் பதிக்கப்படவில்லை. கழிவுநீர் சாலையில் செல்கிறது.

நகர்மன்றத் தலைவர் கா.கருணாநிதி பதில் அளித்து பேசியதாவது: கோவில்பட்டி செக்கடித் தெரு பகுதி வாறுகாலில் ஏற்கெனவே மண் எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் அந்த பிரச்சினை இருக்கு மென்றால், ஓரிரு வாரங்களில் சரி செய்து தரப்படும். கோவில்பட்டியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பாக அரசு தான் அறிவிக்க வேண்டும். ஆனால், கோவில்பட்டி நகராட்சி விரிவாக்கம் தொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையை இடித்துவிட்டு, ரூ.10 கோடி செலவில் புதிதாக கட்டப்பட உள்ளது. சாத்தூர் பிரதான சாலையில் இருந்து சந்தைக்கு வரும் வழியில் ஓடையில் பாலம் அமைக்கப்பட உள்ளது. அப்போது நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்புகள் இல்லாதவாறு ஏற்பாடுகள் செய்யப்படும். கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் குப்பைக்கிடங்கு இருந்த பகுதி இனாம் மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்டது. அங்கு அடர்காடுகள் திட்டத்தில் 2,000 மரக்கன்றுகள் நடவு செய்துள்ளோம். நகராட்சி விரிவாக்கம் வரும்போது, அங்கு பூங்கா அமைப்பது குறித்து முடிவெடுக்கலாம்.

கோவில்பட்டி 2-வது குடிநீர் திட்டத்தில் ஒவ்வொரு மேல்நிலைத்தொட்டி வாரியாக புதிய மதிப்பீட்டில் வேலை செய்ய தயாராக உள்ளோம். இதனை சரி செய்ய ஓராண்டு காலமாகிவிடும். புதுப்பிக்கும் பணிகளுக்காக தினசரி சந்தையை இடிக்கும்போது, புதிய கூடுதல் பேருந்து நிலைய வளாகத்தில் சந்தை தற்காலிகமாக இயங்க நடவடிக்கை எடுக்கப்
பட்டுள்ளது. கூடுதல் பேருந்து நிலையத்திலும் பரா மரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் உள்ள மயானத்துக்கு சாலை வசதி செய்துதரப்படும். ஆபத்தான நிலையில் உள்ள உயர்மின் வயர்களை மாற்று வழித்தடங்கள் வழியாக கொண்டு செல்ல வழிவகை செய்யப்படும்.

கோவில்பட்டியில் உள்ள ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நவீன முறையில் கழிப்பிடங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். நகராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் ஓராண்டுக்குள் சரிசெய்யப்படும். குடிநீர் குழாய் பிரச்சினைகளையும் சரிசெய்ய வேண்டியதுள்ளது. ராமசாமி தாஸ் பூங்காவில் கலைஞர் அறிவுசார் மையம் அமைக்கும் பணி ரூ.2.20 கோடியில் நடந்து வருகிறது. பூங்காவை நவீனமாக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இங்கு நூலகம் அமைக்கப்படும். ரயில்வே இருப்பு பாதையை மக்கள் கடந்து வருவதற்கு காந்திநகர், பண்ணைத் தோட்டத் தெரு பகுதி, வேலாயுதபுரம், புதுக்கிராமம் ஆகிய இடங்களில் நடைமேடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இசை ஆசிரியை கலைமாமணி ம.அமலபுஷ்பம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளிவரும் பகுதிகள், அதன் பயன்கள் குறித்து பாட்டு பாடினார். ‘மக்களின் பிரச்சினைகளை கண்ணாடி போன்று ‘இந்து தமிழ்’ நாளிதழ் பிரதிபலித்து வருகிறது. இயற்கை பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவற்றிலும் ‘இந்து தமிழ்’ பங்களிப்பு அளப்பரியது’ என்றார் அவர்.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஓ.ராஜாராம், நகர்மன்ற உறுப்பினர் எல்.பி.ஜோதிபாசு, ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி செயலாளர் ஏ.சுப்பிரமணியன், கோவில்பட்டி முகவர் ஆர்.லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர். நிகழ்ச்சியை இளையர சனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் செ.முருகசரஸ்வதி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியை எம்.எஸ்.எஸ்.வி. ஆபரண மாளிகை இணைந்து வழங்கியது.

அ.மரியஜேசு, வள்ளுவர் நகர்

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையில் நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனை சரி செய்ய வேண்டும்.

மா.கோமதி, நடராஜபுரம் தெரு

நடராஜபுரம் தெருவில் புதிய இணைப்பில் குறைவான நேரம் மற்றும் குறைந்தளவே தண்ணீர் வருகிறது. மேலும், ரயில்வே இருப்பு பாதைகள் அதிகரித்து விட்டதால், எங்கள் பகுதி மக்கள் இருப்பு பாதையை கடந்து செல்ல நடைமேடை அமைத்து தர வேண்டும்.

சிவசக்திவேல் முருகன், 17-வது வார்டு

தெட்சிணா மூர்த்தி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்பட்டி நகராட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.

ஸ்டீபன் இளையராஜா

ராமசாமி தாஸ் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களை புதுப்பித்து தர வேண்டும். வெங்கடேஷ் நகரில் உள்ள அறிவியல் பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.

எஸ்.ராஜ்குமார், கிருஷ்ணா நகர்

கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் குப்பைக் கிடங்கு இருந்த பகுதியை சுத்தப்படுத்தி உள்ளனர். அந்த இடத்தில் சிறுவர்கள் விளையாடும் பூங்கா அமைக்க வேண்டும்.

முத்துராஜ்

கோவில்பட்டி நடராஜபுரத்தில் உள்ள 20 தெருக்களில் 8 தெருக்களுக்கு மட்டும் புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தெருக்களுக்கும் புதிய சாலை அமைக்க வேண்டும்.

கே.செந்தில் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட்

கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் அனைத்து சமுதாய மக்கள் பயன் படுத்தும் மயானத்துக்கு தனிப்பாதை அமைத்து தர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x