Last Updated : 23 May, 2022 04:17 PM

1  

Published : 23 May 2022 04:17 PM
Last Updated : 23 May 2022 04:17 PM

சென்னை விமான நிலையத்தில் முதன்முறையாக ‘ஸ்கைலைட்’ சிஸ்டம் - புதிய வசதிகள் என்னென்ன? 

சென்னை: இயற்கையான சூரிய ஒளி மற்றும் காற்றோட்ட வசதிகள் பயணிகளுக்கு கூடுதலாக கிடைக்கும் வகையில், சென்னை விமான நிலையத்தில் அதிநவீன "ஸ்கைலைட் சிஸ்டம்" அமைக்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக இந்த சிஸ்டம் அமைக்கப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் 2,400 கோடி ரூபாய் செலவில் உள்நாடு மற்றும் சா்வதேச முணையங்களை இணைத்து ஒருங்கிணைந்த அதிநவீன, புதிய விமான முனையங்கள் கட்டும் பணி, 2018 செப்டம்பரில் தொடங்கியது. 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்படும் இந்தப் புதிய முனையங்களின் பணி கடந்த 2021-ம் ஆண்டிலேயே நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால், கரோனா தொற்று பாதிப்பு, தொடா்ச்சியான ஊரடங்கு, நிலங்கள் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் இப்பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் ஓர் ஆண்டில் கையாளப்படும் பயணியர்களின் எண்ணிக்கை தற்போது 1.7 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்த சில ஆண்டுகளில் 3.5 கோடியாக அதிகரிக்கும். அதற்கு தகுந்தாற்போல் இந்த புதிய முணையம் கூடுதல் வசதிகளுடன் கட்டப்பட்டு வருகின்றது.

தரை தளத்தில் சர்வதேச வருகை பயணியருக்கான வழக்கான நடைமுறைகளும், இரண்டாவது தளத்தில் பயணியருக்கான புறப்பாடு நடைமுறைகள் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய அதிநவீன முணையத்தில் மொத்தம் 5 தளங்கள் உள்ளன. பயணிகள் ஓய்வு அறைகள், விவிஐபிகள் தங்கும் அறைகள், ஷாப்பிங் மால்கள் உட்பட பல்வேறு கூடுதல் வசதிகள் இந்தப் புதிய முனையத்தில் அமைகின்றன.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் முதல் முதலாக ‘ஸ்கைலைட் சிஸ்டம்’ எனும் முனையத்திற்குள் அதிகளவு சூரிய ஒளி வெளிச்சம் வருவதற்கான, பிரத்யேக வடிவமைப்புகள் அமைக்கப்படுகின்றன. 6 மீட்டர் வட்ட வடிவில், 10-க்கும் மேற்பட்ட ஸ்கைலைட் சிஸ்டம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சூரிய வெளிச்சம் நேரடியாக விமானநிலையத்தின் உள்பகுதிக்கு வருவது போல் அமைக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் சூரிய வெளிச்சம் மட்டுமே உள்ளே வரும்.வெப்பத்துடன் கூடிய புற ஊதாக் கதிர்கள் உள்ளே நுழையாமல் தடுக்கும் திறனும் இதில் உள்ளது. இந்த சிஸ்டத்திற்கு மேலும், கீழுமாக 2 பகுதிகளிலும் சிறப்பு கண்ணாடிகள் அமைக்கப்படுகின்றன. அவை சூரிய ஒளியை பில்டா் செய்து,வெளிச்சத்தை மட்டும் உள்ளே அனுப்பும். வெப்பத்தை தடுத்து நிறுத்தும். இந்த ஸ்கைலைட் சிஸ்டம் அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

இதனால், இந்தப் புதிய அதிநவீன முணையங்கள் நல்ல வெளிச்சங்களுடன், காற்றோட்ட வசதியுடனும் இருக்கும். அதே நேரத்தில் மின்சார செலவும் கணிசமான அளவு குறைய வாய்ப்பு உள்ளது. இந்தப் புதிய அதிநவீன ஒருங்கிணைந்த விமான முனையங்களின் பணிகளில், சுமாா் 80 சதவீதம் முடிக்கப்பட்டு, வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது 2023 தொடக்கத்தில் பணிகள் முழுமையாக நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x