Published : 23 May 2022 06:57 AM
Last Updated : 23 May 2022 06:57 AM
கோவை: முறையாக பதிவு செய்யாமல் உணவு விற்பனை கடையாக உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களை கோவையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவையில் உள்ள முக்கியசாலைகளில் மாலை, இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள், பொதுப் போக்குவரத்துக்கான வேன், ஆட்டோ போன்ற வாகனங்களை உணவு விற்பனை கடையாக உருமாற்றி, சமையல் எரிவாயு மூலம் உணவு தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். எனவே, வாகன தணிக்கையின்போது இது போன்ற வாகனங்கள் தென்பட்டால், முறையாக பதிவு செய்யாத வாகனஉரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை சரக இணைப்போக்குவரத்து ஆணையர் (பொறுப்பு) பொன்.செந்தில்நாதன் கோவை தெற்கு, வடக்கு, மேற்கு, மைய வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தர விட்டிருந்தார்.
இதையடுத்து, அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் 7 வாகனங்கள் கண்டறியப்பட்டன. இதுதொடர்பாக, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, “சோதனையின்போது கண்டறியப் பட்ட 7 வாகனங்களில் 3 வாகனங்களை உருமாற்றம் செய்ததை முறையாக பதிவு செய்துள்ளனர். 4 வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லை. அதில் 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. வாகனத்தை நடமாடும் கேண்டீனாக மாற்றிக்கொள்ள சட்டத்தில் வழிவகை உள்ளது. வாகனத்தை முதல்முறையாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்டிஓ) பதிவு செய்தபடி இல்லாமல், நிறத்தை மாற்றுவது, வாகன அமைப்பில் மாற்றம் செய்வது போன்ற எதைச் செய்தாலும் மத்திய மோட்டார் வாகன சட்டப்பிரிவு 52-ன்கீழ் ஆர்டிஓவிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
வாகனத்தில் ஏற்படுத்தப்பட் டுள்ள மாற்றத்தை முறையாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தெரிவித்து பதிவு செய்யவேண்டும். அவ்வாறு பதிவு செய்யாமல் இருப்பது விதிமீறலாகும். அவ்வாறு பதிவு செய்யும்போது யார் அந்த வாகனத்தின் வடிவத்தை மாற்றித்தருகிறார்களோ அவர்களி டம் சான்று பெறவேண்டும்.
மேலும், உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 101-ன் படி என்ஏஎம்வி படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். இல்லையெனில், அந்த வாகனத்துக்கு அபராதம் விதிக்கப்படும். வாகனத்தில் சிலிண்டர் வைத்து சமையல் செய்ய நாங்கள் ஒப்புதல் அளிப்பதில்லை. வடிவ அமைப்பின் மாற்றத்துக்கு மட்டுமே போக்குவரத்து துறை சார்பில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT