Last Updated : 21 May, 2016 03:05 PM

 

Published : 21 May 2016 03:05 PM
Last Updated : 21 May 2016 03:05 PM

தாராபுரம், மடத்துக்குளத்தில் காங்., திமுக வென்றது எப்படி?

திருப்பூர் மாவட்டத்தில் கடும் போட்டிக்கிடையே திமுகவும் காங்கிரஸ் கட்சியும் வென்ற தொகுதிகள் மடத்துக்குளம், தாராபுரம்.

இவற்றில் தாராபுரம் தனித் தொகுதி. 65 ஆண்டு வரலாற்றைக் கொண்டது. இங்கு, திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் காளிமுத்து 83,538 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட 10,017 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார்.

இத் தொகுதியில் 1957-ல் காங்கிரஸ் சார்பில் சேனாதிபதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு இத் தொகுதியில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தற்போது வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2011 தேர்தலில் அதிமுகவில் இங்கிருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கே.பொன்னுசாமிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.

இவர் அப்போது 83,856 வாக்குகள் பெற்றிருந்தார். தற்போதைய தேர்தலில் 73,521 வாக்குகளே பெற்றுள்ளார். தற்போது பெற்ற வாக்குகளை ஒப்பிடும்போது, 10,335 வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார். இவரது வாக்கு வித்தியாசமும் 10,017 வாக்குகள் குறைவாகப் பெற்றதுதான்.

கட்சியின் நிர்வாகிகளை கண்டு கொள்ளாதது, எளிதாக வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை, ஆங்காங்கே கிளம்பிய சிறு சிறு எதிர்ப்புகளையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாதது, முக்கியமாக உட் கட்சிக்குள் நடைபெற்ற ‘உள்ளடி’ வேலைகளே தோல்விக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

மடத்துக்குளத்தை பொறுத்தவரை திமுக வேட்பாளர் ஆர்.ஜெயராமகிருஷ்ணன் 76,619 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுகவில் கே.மனோகரன், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே வாய்ப்பு கிடைக்காத நிர்வாகிகளிடமிருந்து புகைச்சல் கிளம்பியது. அவருக்கு எதிராக புகார் மனுக்களை அனுப்பினர். இதற்கிடையேயும் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காக பிரச்சாரத்தில் எதிர்ப்பாளர்களையும் உடனிருத்திக் கொண்டே பிரச்சாரம் மேற்கொண்டார். இருப்பினும் 1,667 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதற்கு கட்சிக்குள் உள்ள முக்கிய புள்ளிகளின் உள்ளடி வேலையும் ஒரு காரணம் என கூறப்பட்டது.

தவிர, இங்கு பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வாபஸ் தேதிக்கு பிறகு அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து அக் கட்சியில் இணைந்துவிட்டார். அப்படியும் இவர் பெயருடன் கூடிய தாமரை சின்னத்துக்கு 2,619 வாக்குகள் கிடைத்துள்ளன. பாஜக சின்னத்துக்கு கிடைத்த அந்த வாக்குகள் விழுந்திருந்தால்கூட, அதிமுகவுக்கு வெற்றி கிடைத்திருக்கும் என்பதுதான் இதில் விநோதம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x