Published : 02 May 2016 04:04 PM
Last Updated : 02 May 2016 04:04 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அக்கட்சி பெறப்போகும் வாக்குகள், அதிமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் திமுக - காங்கிரஸ் கூட்டணியினர் உற்சாகமடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது, குமரி மாவட்டத்தில் பாஜகவே வெற்றி பெற்றது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கிள்ளியூர் நீங்கலாக மற்ற 5 தொகுதிகளில் பாஜகவே முன்னிலை வகித்தது.
தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி, தேமுதிக தமாகா - மக்கள் நலக் கூட்டணி, அதிமுக, பாஜக என நான்கு முனைப் போட்டி குமரியில் நிலவுகிறது.
திமுகவினர் மகிழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசியல் சார்பு அற்ற இந்துக்களில் பலரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவையும், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவையும் ஆதரித்து வந்துள்ளது கடந்த கால தேர்தல்கள் காட்டும் பாடமாக உள்ளது. இந்நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற பெருவாரியான வாக்குகளை, தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலிலும் பெறுவதற்கு பாஜக கடுமையாக முயற்சித்து வருகிறது.
அவ்வாறு, பாஜக அதிக வாக்குகளைப் பெற்றால், அது அதிமுகவைத்தான் பாதிக்கும் என திமுக - காங்கிரஸ் கூட்டணியினர் உறுதியாக நம்புகின்றனர். இதனால், தாங்கள் எளிதில் வெற்றிபெறுவோம் என திமுக கூட்டணியினர் உற்சாகத்தில் உள்ளனர்.
பதிலடி கொடுக்கும் அதிமுக
ஆனால், அந்த காரணத்தையே சுட்டிக்காட்டி, பாஜக பெறும் வாக்குகள் திமுக கூட்டணிக்கே சாதகமாக முடியும். எனவே, பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள்; அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று கிராமப் பகுதிகளில் அதிமுகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஆலயங்களில் அன்னதானம், இலவச காலணிகள் பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களை ஜெயலலிதா தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது. இதுபோன்று எந்த திட்டத்தையும் பாஜக ஆளும் மாநிலங்களில் கொண்டுவரப்படவில்லை என்று கூறி அதிமுகவினர் வாக்குச் சேகரிக்கின்றனர்.
வெற்றி யாருக்கு?
இதையெல்லாம் கண்டுகொள் ளாத பாஜக தரப்போ, தனது வாக்கு வங்கியை அதிகரித்து வெற்றிக்கோட்டை தொட வேண்டும் என்ற முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறது. அக்கட்சியினர் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சாதனைகள் குறித்து கடைக்கோடி கிராமங்கள் வரை பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
குமரியில் பாஜக பெறும் வாக்குகள் அதன் வெற்றிக்கு அடித்தளமிடுகிறதோ இல்லையோ, இந்த மாவட்டத்தில் இருந்து சட்டப்பேரவைக்கு போகப் போகிறவர்கள் யார் என தீர்மானிக் கும் சக்தியாக உள்ளது. அதிமுவின் வியூகம் ஜெயிக்குமா? திமுக கூட்டணியின் கனவு பலிக்குமா? என்பது தேர்தல் முடிவில் தான் தெரியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT