Published : 26 May 2016 11:21 AM
Last Updated : 26 May 2016 11:21 AM
இந்திய திரையிசைப் பாடகர்களில் ‘டிஎம்எஸ்’ என்று எல்லோராலும் அன்போடு கொண்டாடப்பட்ட டி.எம்.சவுந்தரராஜனின் 3-வது நினைவு தினம் நேற்று (மே 25) அனுசரிக்கப்பட்டது. ‘இறக்கும் மனிதர்கள் இறவாப் பாடல்கள்’ என்று கூறிய மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் கூற்று உண்மைதான் என்று நிரூபிக்கும் வகையில், டிஎம்எஸ் பாடிய பாடல்கள் இன்றும் எங்காவது ஓரிடத்தில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. சராசரி மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்துக்கும் அவரது பாடல்களை மேற்கோள் காட்ட முடியும்.
அவரைப் பற்றிய ஆவணப் படத்தை விஜயராஜ் எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். அவர் டி.எம்.சவுந்தரராஜனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றவர். வாழ்க்கை தத்துவத்தை மிக ஆழமாக, அதே நேரம் மிக எதார்த்தமாக அறிந்தவர் டி.எம்.சவுந்தரராஜன் என்று கூறும் அவர், இதுபற்றிய தனது அனுபவங்களை நம்முடன் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறார்.
வாழ்க்கை தத்துவம்
‘‘வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டுமானால், கோயில் களுக்கோ, ஆசிரமங்களுக்கோ, இமயமலைக்கோ போகத் தேவை இல்லை. மாதம் பிறந்தவுடன் அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கு பொதுப்பிரிவில் உள்ள அனைத்து நோயாளிகளையும் ஒரு சுற்று பார்வையிட வேண்டும். முடிந்தால் அவர்களுக்கு ஒரு டீ, பன் வாங்கிக்கொடுக்க வேண்டும். மாதத்தின் கடைசி தினத்தன்று சுடுகாட்டுக்குப் போய் எரியும் உடலை ஐந்து அல்லது பத்து நிமிடம் வைத்தகண் வாங்காமல் பார்த்துவிட்டு வர வேண்டும். வாழ்க்கை தானாக புரிந்து விடும்’’ என்று டிஎம்எஸ் ஐயா அடிக்கடி கூறுவார்.
இறைவியிடம் கோபம்
முதன்முதலாக அவர் சென்னைக்கு வந்தபோது, திரைப்படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் 5 நாட்கள் வரைகூட உணவு இல்லாமல் இருந்திருக்கிறார். கையில் காசு இல்லாமல், வறுமை யின் எல்லையைப் பார்த்தவர். அப்போது மயிலை கற்பகாம்பா ளிடம் சென்று கோபத்துடன் கோபுரத்தைப் பார்த்து ஏசுவாராம். ‘நல்ல குரலையும் கொடுத்துவிட்டு, இப்படி வறுமையையும் அளித்து விட்டாயே கற்பகமே! உனக்கு கண் இருக்கிறதா, மனம் இருக்கிறதா’ என்றெல்லாம் பிதற்றுவாராம்.
வாழ்க்கையில் ஓரளவு முன்னேற் றப் பாதையில் அவரது பயணம் தொடங்கியபோது நன்றி மறவாமல் அந்த ஒப்பற்ற அன்னையான மயிலை கற்பகாம்பாள் மீது ‘கற்பகமே உனையன்றி துணை யாரம்மா’, ‘கற்பகவல்லி நின் பொற் பதங்கள் பிடித்தேன்’, ‘அம்பிகை யின் மலர்ப் பாதம்’ போன்ற பல பாடல்களைப் பாடி அம்பிகையின் பரிபூரண அருளைப் பெற்றவர் டிஎம்எஸ்.
மக்கள் மனம் அறிந்தவர்
ஒருமுறை வள்ளலார் திருவிழா இசைக் கச்சேரிக்காக ஒருநாள் முன்னதாகவே அவருடன் சென்று விடுதியில் தங்கியிருந் தோம். அன்று அங்கு சீர்காழி சிவசிதம்பரத்தின் கச்சேரி. ‘‘என் பிள்ளை பாடுகிறான். வா சென்று வரலாம்’’ என்றார். தனது மோதிரங்கள், தங்கச்சங்கிலிகள் எல்லாவற்றையும் கழற்றி வைத்தார். சாதாரணமான வெள்ளை வேட்டி, சட்டையை அணிந்தார். நெற்றியில் ஒரு சிறிய பொட்டு மட்டும் வைத்துக்கொண்டு புறப்பட்டார். ‘‘நீ மக்களோடு மக்களாக சென்று உட்கார். என்னைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கவனி. நிச்சயம் என் தோற்றத்தைப் பார்த்து பரிதாபப்படுவார்கள். எப்படி வாழ்ந்தவர் இப்படி ஆகிவிட்டாரே என்று கூறுவார்கள்” என்றார்.
சிவசிதம்பரம் ஒரு பாடலை பாடி முடித்துவிட்டு, ‘‘என் அப்பா வந்திருக்கிறார்’’ என்றார். டிஎம்எஸ் எழுந்து நின்று கூட்டத்தைப் பார்த்து கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். கரகோஷம் எழுந்தது. அப்போது, என் அருகே இருந்த இருவர், உண்மையிலேயே ஐயாவைப் பார்த்து பரிதாபப்படும் வகையில் பேசிக்கொண்டார்கள். எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ‘நான் சொன்னது சரிதானே’ என்கிற வகையில் ஐயாவும் என்னை நோக்கி பார்வையை வீசினார். நானும் ஆமோதித்தேன்.
மறுநாள் டிஎம்எஸ் கச்சேரி. வழக்கம்போல பட்டாடை, பட்டு வேட்டி, ஜரிகை அங்கவஸ்திரம், தங்கச் சங்கிலிகள், மோதிரங் கள் அணிந்துகொண்டு கம்பீர மாக புறப்பட்டார். ஐயா சொன் னதுபோல, அன்றைய தினமும் கூட்டத்தின் நடுவே உட்கார்ந்தேன். ‘‘பார்றா இந்த ஆளை. சம்பா தித்ததை எல்லாம் கையிலும், கழுத்திலும், உடையிலும் காட்டிக் கொள்கிறான். சாதாரணமாக வந் தால், அவரது பாட்டையோ, அவ ரையோ மதிக்க மாட்டோமா என்ன’’ என்று இருவர் பேசிக்கொண்டனர்.
கச்சேரி முடிந்து விடுதிக்கு வந்ததும், இதை அப்படியே கூறி விட்டு, ‘‘நான் சொன்னது சரியா?’’ என்றார். அப்படியே அவரது காலில் விழுந்து வணங்கினேன். ‘வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்’ என்று தான் பாடிய பாடலுக்கு இதுதான் அர்த்தம் என்றும் கூறினார். உண்மையிலேயே அவர் ஒரு சித்த புருஷர் என்பதை அன்று உணர்ந்தேன். இந்த அளவுக்கு மக்களின் எண்ண ஓட்டத்தை துல்லியமாக நாடிபிடித்துப் பார்த் ததால்தான், மக்களால் பெரிதும் விரும்பப்படுகிற, மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கிற பாடகராக டிஎம்எஸ் விளங்குகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT