Last Updated : 23 May, 2022 04:27 PM

1  

Published : 23 May 2022 04:27 PM
Last Updated : 23 May 2022 04:27 PM

உங்கள் குரல் - தெருவிழா @ கடலூர் | கடலூர் மாவட்ட பேரூராட்சிகளில் முதன்முறையாக கிள்ளையில் 100 நாள் வேலைத்திட்டம்

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் நேற்று நடந்த ‘உங்கள் குரல் - தெரு விழா’ நிகழ்ச்சியில் மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து பேசுகிறார் பேரூராட்சித் தலைவர் எஸ்.மல்லிகா. உடன் துணைத் தலைவர் கிள்ளை எஸ்.ரவிந்திரன், செயல் அலுவலர் செல்வி.

பொதுமக்கள் தங்கள் வாழும் பகுதியில் நிலவும் பொது பிரச்சினைகளை, அந்தந்தப் பகுதி உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் கவனத் துக்கு கொண்டு சென்று தீர்வு காண வாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில், நமது ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘உங்கள் குரல் - தெருவிழா’ நிகழ்வை ஊர்கள் தோறும் நடத்தி வருகின்றன.

அதன்படி கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் உள்ள டாடா சமுதாயக் கூடத்தில் ‘உங்கள் குரல் - தெருவிழா’ நிகழ்வு நேற்று நடைபெற்றது. பேரூராட்சி செயலர் அலுவலர் செல்வி முன்னிலையில், பேரூராட்சியில் உள்ள 15 வார்டு உறுப்பினர்களும், அதிகாரிகளும், பொதுமக்களும் இந்நிகழ்வில் திரளாக பங் கேற்றனர்.

குடிநீர் சிக்கல்

நிகழ்ச்சியில், முகமது இசாக், அப்சர் அலி, குணசேகரன், பாலகிருஷ்ணன், விஸ்வ நாதன், அறிவழகன், நந்தகோபால், லெனின் ஆறுமுகம், செஞ்சி, பாண்டியன் உள்ளிட்ட கிள்ளை பேரூராட்சி குடியிருப்புவாசிகள் பலரின் கேள்விகளுக்கு, நிகழ்வுக்கு தலைமை வகித்த பேரூராட்சி தலைவர் எஸ்.மல்லிகா, துணைத்தலைவர் கிள்ளை ரவிந்திரன் ஆகி யோர் அளித்த பதில் விவரம் வருமாறு:

பேரூராட்சியின் செயல்பாடுகளை சுய பரிசோதனை செய்து பார்க்கும் நிகழ்வு இது.

பேரூராட்சியின் முக்கியப் பிரச்சினை குடிநீர் தேவையை தீர்த்து வைப்பது; 2008-ம்ஆண்டில், கிராம ஊராட்சிகளுக்காக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தசட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட் டது. ‘சுனாமியால் பாதிக்கப்பட்ட பேரூராட்சி’ என்ற நிலையில், நமது பேரூராட்சியும் சேர்க்க கோரிக்கை வைக்கப்பட்டு, அதற்காக ரூ.60 லட்சம் பங்குத்தொகை செலுத்தப்பட்டது.

அதன்படி கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக நமது பேரூராட்சி மாதந்தோறும் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.1.6 லட்சம் செலுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ், நமது பேரூராட்சிக்கு வாரியம் நாள் ஒன்றுக்கு 7 லட்சம் லிட்டர் தண்ணீர் தர வேண்டும். ஆனால், 40 ஆயிரம் லிட்டர் மட்டுமே வழங்கப்பட்டது. அதனால் தான் தட்டுப்பாடு நிலவுகிறது. தற் போது பேரூராட்சி அளித்த அழுத்தத்தின் பேரில்நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் வரை குடிநீர் பெற்று தேவையை நிறைவு செய்கிறோம். நமக்கான முழு அளவைப் பெற்று, குடிநீரில் தன்னி றைவு பெற்ற பேரூராட்சியாக மாற்றப்படும்.

நம் பேரூராட்சிக்குட்பட்ட எம்ஜிஆர் திட்டு,குச்சிபாளையம், கிள்ளை கடைவீதி உட்பட4இடங்களில் பேரூராட்சி பொது நிதியில் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டு 12 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது. தற்போது எடுக்கப்பட்ட முயற்சியால் எம்ஜிஆர் திட்டில் செயல்பட தொடங்கியுள்ளது. மீத முள்ள 3 இடங்களிலும் ஒரு மாதத்துக்குள் செயல்படும். அனைத்து பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவோம்.

கூட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர். படங்கள்: எம்.சாம்ராஜ்

இறால் பண்ணை, சுடுகாடு பிரச்சினை

‘பகுதி நேர ரேஷன் கடைகள் தேவை’ என்று ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம். மீன்பிடி பாதைக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். கடற் கரையோரம் மீன்பிடித்துறை உள்ள பகுதியில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கப்படும். இறால் பண்ணைகளால் பாதிப்புகள் இருக் கின்றன. இப்பண்ணைகளுக்கு எதிரான தீர்மா னத்தை பேரூராட்சியில் நிறைவேற்றி, மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்புவோம்.

சிதம்பரம் எம்எல்ஏ தொகுதி வளர்ச்சி நிதியில்இருந்து ரூ. 5 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டு டெண்டர் வைக்கப்பட்ட நிலையில், முழக்குத்துறை சுடுகாடு கட்டுமானத்தை வனத்துறையினர் தடுத்தனர். வனத்துறை அமைச்சருக்கு இத்தகவலை கொண்டு சென்றுள்ளோம்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட் சிகளில் கிள்ளை பேரூராட்சியில் மட்டுமே 100 நாள் வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் நமது பேரூராட்சிக்குட்பட்ட 9 குளங் களில் பணிகள் தொடங்கி நடைபெறுகின்றன. இப்பணிகள் அனைத்து வார்டுகளுக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும். 100 நாள் வேலை திட்டத்திலேயே சீமை கருவேல மரங்களை அகற்ற கேட்டுள்ளோம்.

பேருந்து நிலையம் அமையுமா?

பேருந்து நிலையம் அமைக்க இங்கு அரசுஇடமோ, பேரூராட்சிக்குட்பட்ட சொந்த இடமோஇல்லை. வக்ஃப் போர்டில் கேட்டுள்ளோம். அதன் இடத்தில் பேருந்து நிலையம் கண்டிப்பாக அமையும். இதுதவிர விளையாட்டு திடல், பூங்காவும் அமைய இருக்கிறது.

நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ. 75 லட்சம் ஒதுக்கீடு செய்து, பணிகள் நடந்துள்ளன. கிள்ளை காளியம்மன் கோயில் குளத்தில் ஒப்பந்தக்காரர் பணி செய்யவில்லை. டெண்டர் விட்டு ஓராண்டுக்குள் பணி தொடங்காவிட்டால் ரத்தாகி விடும். அப்பணியை தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று பதில ளித்தனர்.

இந்நிகழ்வை, நமது ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் 2021-ம் ஆண்டு ‘அன்பாசிரியர் விருது’ பெற்ற ஆசிரியை சசிகலா தொகுத்து வழங்கினார்.

‘இங்கு வசிக்கும் நாம் அனைவரும் ஓர் குடும்பம்!’

கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச்செயலர் விஸ்வநாதன், "கிள்ளை பேரூராட்சித் தலைவர் பதவியில் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டை வரவேற்றோம். பதவியேற்று 3 மாதங்களாகியும், தலைவருக்கு பெயர் பலகையுடன் தனி அறை ஒதுக்கப்படவில்லை. அவருக்கான தொடர்பு எண்ணை அலுவலகத்தில் எழுதவில்லை. தலைவர் அதிகாரத்தோடு செயல்படவில்லை. பேரூராட்சி அலுலகத்தில் பணி செய்வோர் தலைவரை மதிப்பது கிடையாது. மேலும், எங்கள் வார்டில் விசிக வென்றதால், அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுகிறது" என்று குறிப்பிட்டார்.

அதற்கு பதில் அளித்த பேரூராட்சியின் தலைவர் மல்லிகா, " எனது உரிமை பறிக்கப்பட்டதுள்ளதா இல்லையா என்பதை நான்தான் சொல்ல வேண்டும். பேரூராட்சியில் தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் செய்து தரப்பட்டுள்ள வசதிகள் பற்றி நம் அனைவருக்கும், உங்களுக்கும் தெரியும். உங்களையும் யாரும் புறக்கணிக்கவில்லை. நம் பேரூராட்சியில் வசிக்கும் நாம் அனைவரும் ஓர் குடும்பம்.

பேரூராட்சி அலுவலகத்தில் கூடுதல் அறைகள் இல்லை. இருக்கும் வசதியை நாம் பயன்படுத்துகிறோம். இருக்கும் வசதியில், தனி அறைக்காக போராட வேண்டுமா..! - மக்களுக்கு போராட வேண்டுமா..! தனி அறை கேட்க நான் வரவில்லை; 15 வார்டுகளிலும் மக்கள் குறை தீர்க்கப்பட வேண்டும்; நல்ல பெயர் பெற வேண்டும்.

பொறுப்புக்கு வந்த தொடக்கத்தில், ‘விரைவாக அனைத்தும் கிடைக்கும்!’ என்று நினைத்தேன். ஒவ்வொரு துறையிலும் முறையான அனுமதி பெற்று, பணிகள் நடக்க வேண்டும். அதற்குத்தான் நேரம் எடுக்கிறது. அதை விரைவுப்படுத்தி, பணிகளைச் செய்வோம்" என்றார்.


சுனில்குமார், 5வது வார்டு

“சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு கட்டப்பட்ட வீடுகளுக்கு வீட்டு வரி ரசீது வழங்கப்படவில்லை. குடிநீர், சாலை, தெரு மின்விளக்கு ஆகியவற்றை சரி செய்ய வேண்டும். சுற்றுலா மையங்களை மேம்படுத்த வேண்டும்” என்று 5 வது வார்டைச் சேர்ந்த சுனில்குமார் கூறினார்.

இதற்கு பதில் அளித்த பேரூராட்சி துணைத் தலைவர், “ரூ.66 லட்சத்துக்கு சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற உள்ளன. சுற்றுலாவை மேம்படுத்துவற்கான திட்டம் அரசின் பரிசீலனையில் இருக்கிறது. ரூ.15 கோடிக்கான திட்டம் மதிப்பீடு செய்யப்பட்டு, அதற்கான கோப்பு முதல்வரின் பார்வையில் உள்ளது” என்று தெரிவித்தார்.

சுதா, 6வது வார்டு

“எங்கள் பகுதியில் தெரு விளக்குகள் நன்றாக போடப்பட்டுள்ளன. மழை காலங்களில் சாலை வசதி இல்லாமல், முட்டிக்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. எங்கள் பகுதி குளத்தை தூர்வார வேண்டும்.வாய்க்காலில் படித்துறை கட்டித்தர வேண்டும்” என்று 6 வது வார்டைச் சேர்ந்த சுதா தெரிவித்தார். இதற்கு பதிலளித்த துணைத் தலைவர், ‘‘குளம் தூர்வாரப்படும். ஒப்புதல் பெற கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் வாய்க்காலில் படித்துறை கட்டித்தரப்படும்” என்றார்.

கதிரவன், பொன்னந்திட்டு 4வது வார்டு

“கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்தி போதுமான குடிநீர் வழங்க வேண்டும். நூலகத்தை விரிவுபடுத்தி தர வேண்டும்” என்று பொன்னந்திட்டு 4 வது வார்டைச் சேர்ந்த கதிரவன் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த துணைத்தலைவர், “அடுத்த 24 மணி நேரத்தில் அந்தப் பகுதியில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நூலகம் நவீன முறையில் விரிவுபடுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

மதுரை செல்வி, 13வது வார்டு

“எங்கள் பகுதியில் குப்பைக் கூளங்கள் அதிகமாக தேங்குகின்றன. அதை அகற்ற குப்பைத் தொட்டி வைக்க வேண்டும். குண்டும் குழியுமாக உள்ள சாலைகளைச் சீரமைக்க வேண்டும்” என்று 13 வார்டைச் சேர்ந்த மதுரை செல்வி தெரிவித்தார். இதற்கு பதிலளித்த துணைத் தலைவர், “தேவைப்படும் இடங்களில் கூடுதல் குப்பைத் தொட்டிகள் உடனே வைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x