Published : 23 May 2022 04:14 PM
Last Updated : 23 May 2022 04:14 PM
பொதுமக்கள் தங்கள் பகுதி பிரச்சினைகள் குறித்து, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கவனத் துக்கு கொண்டு சென்று தீர்வு காணும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘உங்கள் குரல்-தெருவிழா’ நிகழ்ச்சி சிவகங்கை இந்திரா நகர் சமுதாயக் கூடத்தில் நேற்று நடந்தது. நகராட்சித் தலைவர் சிஎம்.துரைஆனந்த் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.கார்கண்ணன் முன்னிலை வகித்தார்.
பள்ளி மாணவி பாரதி தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். எஸ்.கே.ஸ்டூடியோ இந்நிகழ்ச்சியை இணைந்து வழங்கியது. ‘இந்து தமிழ் திசை’ விற்பனைப் பிரிவு துணை மேலாளர் எஸ்.விஜயகுமார் வரவேற்றார். ‘இந்து தமிழ் திசை’ முகவர் ராஜேஷ் குமாரசாமி விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார். அன்பாசிரியர் ஆர்.முருகேஸ்வரி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் குறித்து பேசினார். ஆசிரியர் இந்திராகாந்தி தொகுத்து வழங்கினார்.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெயசிம்மன் மற்றும் கவுன்சிலர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி யில், நகராட்சித் தலைவர் பொது மக்களிடம் கலந்துரையாடினார்.
இதில் பொதுமக்கள் பேசியதாவது: 12-வது வார்டில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரிக்கு நகராட்சி சார்பில் வழங்கப்பட்ட குடிநீர் நிறுத்தப்பட் டுள்ளது. அதைத் தொடர்ந்து வழங்க வேண்டும். 20-வது வார்டு பெரியார் தெருவில் சிலர் செப்டிக் டேங்க் கழிவுகளை கால்வாயில் விடுகின்றனர். இதைத் தடுக்க வேண்டும். மேலும் அப்பகுதியில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன.
அரண்மனைவாசலில் உள்ள சண்முக ராஜா கலையரங்கம் சேதமடைந்து விட்டது. புதிதாக கலையரங்கம் கட்டித் தர வேண்டும். பொது நிகழ்ச்சிகள் நடக்கும் வகையில் ஆயிரம் இருக்கைகளுடன் உள் அரங்கம் அமைக்க வேண்டும். குழந்தைகள் பொழுது போக்க பூங்காக்கள் ஏற்படுத்த வேண்டும். இந்திரா நகரில் புதிதாக ரேஷன் கடை ஏற்படுத்த வேண்டும் என்றனர்.
நகராட்சித் தலைவர் சிஎம்.துரைஆனந்த் பதிலளித்து பேசியதாவது: மக்கள் பிரதிநிதிகளை பொதுமக்கள் நேரில் சந்தித்து தங்களது குறைகளை தெரிவிக்க ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அரண்மனை வாசல் சண்முகராஜா கலையரங்கம் ரூ.10 லட்சத்தில் சீரமைக்கப்படுகிறது. மேலும் பொது நிகழ்ச்சிகள் நடக்கும் வகையில் உள் அரங்கமும் கட்டப்படும்.
ரூ.3 கோடியில் நகரில் மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. அப்போது கே.பி.கே.நகரில் மழைநீர் வடிகால் அமைக் கப்படும். சூரக்குளம் சாலை எம்ஜிஆர் நகர் பின்புறமுள்ள பகுதியில் சாலை வசதி, பாதாளச் சாக்கடை வசதி செய்து தரப்படும். ரூ.1.80 கோடியில் கலைஞர் நூலகம் அமைக்கப்படுகிறது. அம்பேத்கர் முதல் தெருவில் தினமும் குப்பைகள் அள்ளப்படும்.
இந்திரா நகரில் புதிதாக ரேஷன் கடை திறக்கப்பட உள்ளது. மேலும் பொழுது போக்குக்காக பூங்கா அமைக்கப்பட்டு நடைபயிற்சிக்கு பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இந்திரா மேடை தெற்கு பகுதியில் உடனடியாக கழிவுநீர் கால்வாய் கட்டி முடிக்கப்படும்.
நகராட்சி முழுவதும் 35 சின்டெக்ஸ் தொட்டிகள் சீரமைக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற தொட்டிகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் ரூ.70 லட்சத்தில் குடிநீர் சீரமைப்பு பணி நடந்து வருவதால், இனி நகராட்சியில் குடிநீர் பிரச்சினை இருக்காது. செக்கடி ஊருணி ரூ.1.36 கோடியில் சீரமைக்கப்படுகிறது. மேலும் 5 ஊருணிகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.3 கோடியில் வாரச் சந்தை விரிவாக்கம், ரூ.4 கோடியில் பேவர் பிளாக் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக எரியாத தெருவிளக்குகள், பேருந்து நிலையத்தில் பழுதடைந்த 200 விளக்குகள் உடனடியாக சீரமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
நிறைவாக ‘இந்து தமிழ் திசை’ மூத்த விற்பனை அலுவலர் எம்.பிரபு நன்றி கூறினார்.
சுமதி, சேதுபதி நகர், 17-வது வார்டு
எங்கள் பகுதி சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதாலும், ஆக்கிரமிப்பாலும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகராஜ், அம்பேத்கர் முதல் தெரு, 15-வது வார்டு
எங்கள் பகுதியில் சமுதாயக் கூடத்தை சுற்றிலும் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடாக உள்ளது. மேலும் அங்குள்ள ஊருணியிலும் குப்பை கொட்டப்படுகிறது. குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
ரவி, இந்திராநகர், 27-வது வார்டு
இந்திரா நகர் மேடை தெற்கு பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டி முடிவடையாமல் உள்ளது. 10 ஆண்டுகளாக அதை முழுமையாக கட்டி தரவில்லை. இதனால் அப்பகுதியில் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி கிடக்கிறது. மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் வருகிறது. கால்வாயை முழுமையாக கட்டி கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜோசப், கேபிகே நகர், 7-வது வார்டு
எங்கள் பகுதியில் 5 தெருக்கள் உள்ளன. ஆனால், இதுவரை கழிவுநீர் கால்வாய் அமைக்கவில்லை. இதனால் கழிவுநீர் சாலைகளில் தேங்கி கிடக்கிறது. கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. எங்கள் பகுதியை பாதாளச் சாக்கடை திட்டத்தில் சேர்க்க வேண்டும் அல்லது கழிவுநீர் கால்வாய் கட்டித் தர வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT