Last Updated : 23 May, 2022 02:57 PM

 

Published : 23 May 2022 02:57 PM
Last Updated : 23 May 2022 02:57 PM

உங்கள் குரல் - தெருவிழா @ குமாரபாளையம் | "கணினி மயமாக்கப்பட்ட நூலகம் விரைவில் தொடங்கப்படும்"

பொதுமக்கள் தாங்கள் வாழும் பகுதியில் நிலவும் பொதுப் பிரச்சினைகளை அந்தந்த பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் உங்கள் குரல் - தெருவிழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில், ஜே.கே.கே. நடராஜா திருமண மண்டபத்தில், ‘உங்கள் குரல் - தெருவிழா’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நகராட்சித் தலைவர் சஷ்டி டி.விஜய்கண்ணன் மற்றும் கவுன்சிலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவர் சஷ்டி டி.விஜய்கண்ணன் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களில் பெரும்பாலானோர் கூறியதாவது;

நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. குமாரபாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. ஒரு வார்டில் சராசரியாக 100 தெருநாய்கள் வீதம் நகராட்சி முழுவதும் 3,300-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளன. இவற்றால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

காவிரி ஆற்றங்கரை பகுதியில் குப்பைக் கொட்டப்படுகிறது. படித்துறை, காவிரி ஆற்றுப் பகுதியில் இரவு வேளையில் மது அருந்தும் கும்பலால் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது.

குமாரபாளையம் 18-வது வார்டு காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள ஆலமரத்தை சுற்றியுள்ள பகுதியை சிலர் மது அருந்தும் இடமாக பயன்படுத்துகின்றனர். மது அருந்திவிட்டு தகாத வார்த்தைகளில் அவர்கள் பேசுகின்றனர். அதுபற்றி தட்டிக்கேட்டால் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கவுன்சிலர் மூலம் எச்சரிக்கை விடுத்தால் சில நாட்களுக்கு வருவதில்லை. பின்னர் மீண்டும் அங்கு வருகின்றனர். இதனால் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல அச்சமாக உள்ளது. இதனை முற்றிலுமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகராட்சி 18-வது வார்டு படித்துறை பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா நகர் பழைய பாலம் அருகே கழிவுநீர் ஆற்றில் கலக்கப்படுகிறது. இதை தடுக்க வேண்டும். படித்துறை அருகே பெண்களுக்கு பொதுக்கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரவேண்டும். மேலும், சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

காவிரி ஆற்றில் நேரடியாக சாயக் கழிவு நீர் கலக்கப்படுவதால் ஆறு மாசுபடுகிறது. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். படித்துறை முழுவதும் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தப்படுகிறது. இதை தடுத்தால் காவிரி ஆறு மாசுபடுவதை தடுக்க முடியும், என கோரிக்கை விடுத்துப் பேசினர்.

அனைவரின் புகார்கள், கோரிக்கைகளை பொறுமையுடன் கேட்ட நகராட்சித் தலைவர் சஷ்டி டி.விஜய்கண்ணன் அவற்றுக்கு பதில் அளித்துப் பேசியதாவது:

`இந்து தமிழ் திசை' ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி சிறப்பானது. இந்நிகழ்ச்சி மேலும் சிறக்க வாழ்த்துகள். பொதுமக்கள் தெரிவித்த குறைகள், புகார்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். நகராட்சி 2-வது வார்டு எடப்பாடி சாலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட சாக்கடை கால்வாயை புதுப்பித்து தர வேண்டுமென அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக செய்து தரப்படும்.

குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் பட்டா பெயர் மாற்றம் தொடர்பான மனுக்களை அளித்து மக்கள் பயன்பெறலாம். குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீர் கலக்க விடக் கூடாது என கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீர் கலக்காமல் இருப்பதை தடுக்க குமாரபாளையம் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமாரபாளையம் நகராட்சியில் நாள்தோறும் 16 டன் குப்பை சேகரமாகிறது. அவற்றில் 11 டன் குப்பை மூலம் உரம் தயாரிக்கப்படுகிறது. அரியலூர் சிமென்ட் பேக்டரிக்கு மாதம் ஒரு முறை மட்டுமே 20 டன் குப்பை கொண்டு செல்லப்படுகிறது. எனவே, மீதமுள்ள குப்பை நகராட்சியில் வைக்கப்படுகிறது. அவற்றை பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குமாரபாளையம் நகராட்சியில் நூலகம் ஒன்று தொடங்கப்பட உள்ளது. சென்னையில் உள்ளது போல் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட நூலகம் தொடங்கப்பட உள்ளது. அவற்றில் இணைய வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும். அதற்கான இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. இவ்வாறு பதில் அளித்தார்.

நிகழ்ச்சியை அன்பாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர் தமிழ்செல்வன் தொகுத்து வழங்கினார்.

வேணுகோபால், 18-வது வார்டு.

காவிரி ஆற்றில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலக்கப்படுகிறது. அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் இக்கழிவு நீர் கலக்கப்படுகிறது. இதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன. கழிவு நீர் கலக்கப்படுதால் நீர் மாசுபடுவதுடன் மக்களும் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். தற்போதைய நகராட்சித் தலைவர் பல்வேறு நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறுகின்றனர். எனவே, சாயக்கழிவு நீர் காவிரி ஆற்றில் கலப்பதை தடை செய்ய வேண்டும். அதுபோல் வீட்டுக் கழிவு நீர் அனைத்தும் காவிரி ஆற்றில் கலக்கப்படுகிறது. கழிவு நீர் கலக்கும் அதே தண்ணீரை மீண்டும் நாம் பயன்படுத்துகிறோம். அவற்றையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அய்யாசாமி, 20-வது வார்டு.

வார்டுக்கு உட்பட்ட பகுதியில் காவிரி ஆற்றின்படித் துறையை ஆக்கிரமித்து மாடுகள் கட்டப்பட்டுள்ளன. படித்துறையில் மாடுகள் சாணம் இடுவதால் அவ்வழியாக செல்வோர் சாணத்தில் கவனமின்றி கால் வைக்கும் சமயங்களில் சறுக்கி விழும் நிலை உள்ளது. மாடுகளால் கொசுத் தொல்லையும் அதிகமாக உள்ளது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழரசி, 18-வது வார்டு.

காவிரி ஆற்றங்கரை பகுதியில் பகல், இரவு வேளையில் மது, கஞ்சா விற்பனை போன்றவை நடைபெறுகிறது. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்றில் கழிவு நீர் நேரடியாக கலந்து விடப்படுகிறது. மின் மயானம் செல்லும் பகுதியில் அமர்ந்து மதுபானம் அருந்துகின்றனர். இதனை தடுக்க வேண்டும்.

சீனிவாசன் , 2-வது வார்டு.

எடப்பாடி சாலை பாளையூரில் வேகத்தடை அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் வடிகால் வசதியில்லை. எனவே, வடிகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். மேலும், காவிரி குடிநீர் குழாய்கள் கழிவுநீர் வழியாக செல்கிறது. இவற்றை சீரமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x