Last Updated : 10 May, 2016 05:19 PM

 

Published : 10 May 2016 05:19 PM
Last Updated : 10 May 2016 05:19 PM

கருணாநிதியின் பி டீம் தான் ப.சிதம்பரம்: பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா பேட்டி

தி.நகர் மக்கள் ஆதரவாக இருப்பதால் அத்தொகுதியில் தனது வெற்றி உறுதியாகிவிட்டதாக கூறுகிறார் சென்னை தியாகராய நகர் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா.

பிரச்சார பயணத்துக்கு இடையே 'தி இந்து' தமிழ் ஆன்லைனுக்கு அவர் அளித்த பேட்டி:

தி.நகர் தொகுதியில் உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

தி.நகர் மக்கள் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதால் இத்தொகுதியில் எங்கள் வெற்றி உறுதியாகிவிட்டது. பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தால் தங்களுக்கும் வங்கிக் கணக்கு இருப்பதில் பெருமிதம் கொள்வதாக அடித்தட்டு மக்கள் பலரும் கூறுகின்றனர். வங்கிக் கணக்கில் மானியத்தை நேரடியாக செலுத்தும் திட்டமும் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. படித்த மக்கள் மத்தியிலும் பாஜகவுக்கே பலமான வரவேற்பு இருக்கிறது.

உங்கள் சொந்த ஊர் காரைக்குடி. நீங்கள் ஏன் அங்கு போட்டியிடாமல் தி.நகரை தேர்வு செய்தீர்கள்?

நான் கடந்த மூன்று ஆண்டுகளாக தி.நகரில் தான் வசிக்கிறேன். எனக்கு இந்தத் தொகுதியும், தொகுதியின் பிரச்சினைகளும் நன்றாகவேத் தெரியும். அதனால் இத்தொகுதியை தேர்வு செய்தேன். தி.நகர் திமுக வேட்பாளர் இப்பகுதியில் வசிக்கவில்லை. அவர் போட்டியிடுகிறார். அந்த வகையில் மூன்று ஆண்டுகளாக இத்தொகுதியை முழுமையாக அறிந்த நான் போட்டியிடுவது பொருத்தமானதே.

தமிழகத்தில் மோடி அலை இருக்கிறதா?

மக்களவை தேர்தலின்போது தமிழக மக்களுக்கு மோடியின் வாக்குறுதி மட்டுமே தெரியும். அந்த வாக்குறுதிகள் மீது எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்போது மோடியின் செயற்திட்டங்களால் தமிழக மக்கள் நேரடியாக பயனடைந்துள்ளனர். மோடி வழியில் நாங்களும் செயல்படுவேன் என நம்புகின்றனர். எனவே, இந்தத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும்.

தி.நகருக்கான உங்கள் திட்டங்கள் என்ன?

தி.நகர் குப்பைக்காடு போல் காட்சியளிக்கிறது. எங்கு திரும்பினாலும் தேங்கிய குப்பைகளை காண முடிகிறது. எனவே நான் வெற்றி பெற்றதும் முதலில் சுத்தமான தி.நகர் அமைப்பேன். சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து சீரடைய நடவடிக்கை எடுப்பேன். கழிவு நீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பேன். மொத்ததில் பசுமையான, வாழ்வதற்கு உகந்த தி.நகரை உருவாக்குவேன்.

நீங்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே பேசுவதாக கூறப்படுகிறதே..

நிச்சயமாக இல்லை. ராயபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் டாக்டர்.ஜமீலா ஒரு கிறிஸ்தவர். நான் சிறுபான்மையினருக்கு எதிரானவன் அல்ல.

தமிழகத்தில் பாஜகதான் அதிமுகவின் ரியல் 'பி' டீம் என ப.சிதம்பரம் விமர்சித்திருக்கிறாரே?

ப.சிதம்பரம் தான் கருணாநிதியின் பி.டீம். அவர் அப்படித்தான் பேசுவார். அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நாங்கள் யாருக்கும் 'பி' டீம் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x