Published : 09 May 2016 05:00 PM
Last Updated : 09 May 2016 05:00 PM
அதிமுகவின் 2-ம்கட்ட தலைவர்கள் போட்டியிடும் தொகுதிக்குள் முடங்கியதால், அதிருப்தி நிர்வாகிகள் ஒத்துழைப்பு இல்லாமல் அக்கட்சி தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பின்றியும் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.
2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல், அதனைத் தொடர்ந்து நடந்த உள்ளாட்சித்தேர்தல், 2014 மக்களவைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களின் பங்கு முக்கியமானதாகக் கருதப்பட்டது. அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம், ஜெயலலிதா பிரச்சாரக் கூட்டம், வேட்பாளர் வேன் பிரச்சாரத்துக்கு நிர்வாகிகள், தொண்டர்களை உற்சாகப்படுத்தி ஒருங்கிணைப்பது, அதிருப்தி நிர்வாகிகளை சரிகட்டி சமாதானம் செய்வது, தேர்தல் பிரச்சாரப் பணிகளில் தொண்டர்களை முடுக்கிவிடுவது உள்ளிட்ட பணிகளை சிறப்பாகச் செய்திருந்தனர்.
தற்போது அதிமுகவின் 2-ம் கட்ட தலைவர்களில் முக்கியமானவர்களான அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் ஆர்.விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஆகியோர் கட்சியில் முக்கியத்துவம் இல்லாமல் உள்ளனர். மற்ற அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், மாநில நிர்வாகிகள் பெரும்பாலானவர்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் தங்கள் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் மூழ்கிவிட்டனர்.
மதுரை மாவட்டத்தில் மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜுவுக்கு, அந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கோ.தளபதி, மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர் உ.வாசுகி கடும் போட்டியை கொடுத்து வருகின்றனர்.
அதனால், மாநகர செயலராக இருந்தும் இவரால் தனது தொகுதியைத் தாண்டி மாநகரின் மற்ற தொகுதி தேர்தல் வியூகத்தில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. அதுபோல், புறநகர் மாவட்டச் செயலர் வி.வி.ராஜன் செல்லப்பா மாநகருக்குட்பட்ட வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அதனால், இவரால் தினமும், புறநகர் மாவட்ட தொகுதிகளுக்கு சென்று பிரச்சாரப் பணிகளை ஒருங்கிணைக்க முடியவில்லை.
இந்நிலையில் ஒருபுறம் மிரட்டும் கோடை வெயில், குடிநீர் தட்டுப்பாடு, மறுபுறம் திமுகவின் திடீர் எழுச்சியால் அதிமுக வேட்பாளர்கள் தன்னம்பிக்கை இல்லாமல் களத்தில் நிற்பதாக கூறப்படுகிறது.
கடந்த காலத்தில் இதுபோன்று அதிமுக வேட்பாளர்கள், தொண்டர்கள் சோர்வடைந்தால் உடனே அங்கு அக்கட்சியின் 2-ம் கட்டத் தலைவர்கள் அனுப்பப்பட்டு தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டு வேட்பாளர்களையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்துவர். கட்சியின் மேலிடக் கண்காணிப்பால் நடவடிக்கை வரும் என்ற அச்சத்தில் நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடுவர்.
இந்த தேர்தலில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக அதிமுக தேர்தல் பணிகளில் கட்சி மேலிடம் கண்காணிப்பு, ஒருங்கிணைப்பு பெயரளவுக்கே இருப்பதாக கூறப்படுவதால் மதுரை மாவட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு போட்டியிடும் மதுரை மேற்கு, புறநகர் மாவட்டச் செயலர் வி.வி.ராஜன் செல்லப்பா போட்டியிடும் மதுரை வடக்கு தொகுதி, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போட்டியிடும் திருமங்கலம் தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் அதிமுக பிரச்சார களம் விறுவிறுப்பு அடையாமல் உள்ளது. தேர்தல் பிரச்சார களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதிமுக மேலிடம் இன்னும் விழிப்படையாமல் இருப்பதால் தொண்டர்கள் சோர்வில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT