Last Updated : 11 May, 2016 12:44 PM

 

Published : 11 May 2016 12:44 PM
Last Updated : 11 May 2016 12:44 PM

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தண்ணீர் இன்றி தவிக்கும் நோயாளிகள்

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தண்ணீர் இன்றி நோயாளிகளும், அவரது உறவினர்களும் பரிதவித்து வருவதால், வெளியில் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கானாவிலக்கில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். நோயின் தன்மைக்கேற்ப உள்நோயாளிகளாகவும் பலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் உபயோகத்துக்காக வைகை அணையில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால், மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வறண்டு விட்டது. அதனால் வைகை அணை தண்ணீரையே மருத்துவமனை நிர்வாகம் முழுமையாக நம்பியுள்ளது.

இதற்கிடையில் போதிய மழையின்மை மற்றும் அணையின் நீர்மட்டம் குறைவு காரணமாக, மருத்துவமனையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் நோயாளிகளின் உறவினர்கள் சிலர் கூறியதாவது: அடிக்கடி மருத்துவமனையில் தண்ணீர் இல்லாமல் போய்விடுகிறது. கடந்த 4 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் இல்லாததால் இங்குள்ள கழிப்பறைகளை ஊழியர்கள் பூட்டி விட்டனர். தண்ணீர் கொண்டு வந்தால் மட்டுமே கழிப்பறைக்குச் செல்ல அனுமதிக்கின்றனர். குடிக்க, துணி துவைக்க, கழிப்பறை என அனைத்து பயன்பாடுகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை (மினரல் வாட்டர்) பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் தினந்தோறும் குறைந்தது 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேனை விலைக்கு வாங்கி வருகிறோம். தண்ணீர் பற்றாக்குறையால் குளிக்காமல் பலர் முகத்தை மட்டுமே சுத்தம் செய்து கொள்கின்றனர்.

ஏழை, எளியோருக்காக கட்டப் பட்ட மருத்துவமனையில் தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம் என்றனர்.

இது தொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசுவிடம் கேட்ட போது, தண்ணீர் கொண்டு வரப்படும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், இரண்டு நாட்களாக தண்ணீர் வரவில்லை.

அப்போது வெளியிடங்களில் இருந்து டேங்கர் லாரியில் தண்ணீர் விலைக்கு வாங்கி ஊற்றப்பட்டது. மருத்துவக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு தண்ணீர் இல்லாமல் இருந்தது.

அதுவும் சரி செய்யப்பட்டு விட்டது. மராமத்துப் பணிக்காக மருத்துவமனையில் சில கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x