Published : 21 May 2022 05:29 PM
Last Updated : 21 May 2022 05:29 PM
சென்னை: தேசிய அளவில் தமிழை முன்னிறுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் திமுக ஆட்சியில் கொள்கைகளின் வரைவு அறிக்கைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியவதாக சமூக செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதை முதல்வர் கவனித்து, தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் புதிதாக ஒரு கொள்கை அல்லது சட்டங்களை உருவாக்கும் முன்பு தொடக்க நிலையில் வரைவு அறிக்கையை தயார் செய்யும். இந்த வரைவு அறிக்கை பொது வெளியில் வெளியிடப்பட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். இதன்படி, மத்திய அரசு பல வரைவு கொள்கைகளை வெளியிட்டுள்ளது. ஆனால், இந்தக் கொள்கைகள் பெரும்பாலும் ஆங்கிலம் அல்லது இந்தியில்தான் வெளியிடப்படும். பின்னர், மாநில அரசுகள் கோரிக்கை வைத்த பிறகுதான் வரைவு அறிக்கைககள் மாநில மொழிகளில் அவை வெளியிடப்படும்.
கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், "இந்த அறிவிக்கையைத் தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட்டு, மாவட்ட வாரியாக கருத்துக் கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
ஆபத்து விளைவிக்கும் திட்டங்களைக் கூட சுற்றுச்சூழல் முன் அனுமதியே பெறாமல் செயல்படுத்த வகை செய்யும் ஓர் அறிவிக்கையை பேரிடர் காலத்திலும் அவசரமாக வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது!
கார்ப்பரேட்டுளுக்கு கார்பெட் விரிக்கும் #EIA2020draft ஐ மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்! pic.twitter.com/YrFGi5HUAe
இதைப்போன்று கடந்த ஆண்டு கோவின் இணையதளத்தில் தமிழ்மொழியை சேர்க்கபடாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து கோவின் இணையதளத்தில் தமிழ்மொழியை சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து கோவின் இணையதளத்தில் தமிழ் சேர்க்கப்பட்டது.
இவ்வாறு எங்கும் தமிழை முன்னிறுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில், வெளியாகும் கொள்கை வரைவுகள் எல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியவதாக சமூக செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மறுகுடியமர்வு மற்றும் மறு வாழ்வு கொள்கையின் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது. முதலில் இந்த அறிக்கையானது ஆங்கிலத்தில் மட்டும்தான் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்பட பல சமூக செயற்பாட்டாளர்களின் கோரிக்கையைத் தொடர்ந்துதான் அந்த அறிக்கை தமிழில் வெளியிடப்பட்டது.
இதைப்போன்று கடந்த மாதம் மனநலம் பாதிக்கப்பட்டு, வீடில்லாமல், சாலையில் உலவுவோர் குறை தீர்ப்பது பற்றி வரைவு அறிக்கையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 144 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கை ஆங்கிலத்தில்தான் வெளியிடப்பட்டது.
மனநலம் பாதிக்கப்பட்டு, வீடில்லாமல், சாலைகளில் உலவுவோர் குறை தீர்ப்பது பற்றிய வரைவு அறிக்கையை தமிழ்நாடு அரசு (NHM-TamilNadu) வெளியிட்டுள்ளது.
144 பக்கங்கள் கொண்ட அறிக்கை, ஆங்கிலத்தில் மட்டும் உள்ள நிலையில்,— கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan (@kbcpim) April 25, 2022
இதனைத் தொடர்ந்து இந்த அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால், தற்போது வரை இந்த அறிக்கை தமிழில் வெளியிடப்படவில்லை. இவ்வாறு தொடர்ந்து, தமிழகத்தின் சமானிய மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய வரைவு கொள்கைகள் எல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு வருகிறது.
வணக்கம் அண்ணா...
தங்களின் கருத்து மிகவும் ஏற்புடையது.வரைவு அறிக்கையை தமிழ்படுத்துவது மற்றும் கால நீடிப்பு சம்பந்தமாக விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்...
இது குறித்து சமூக செயற்பாட்டாளரும் சிபிஎம் மத்திய சென்னை மாவட்ட செயலாளரும் ஜி.செல்வா கூறுகையில், "தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய வரைவு அறிக்கை முதலில் ஆங்கிலத்தில்தான் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்ட பிறகு தமிழில் வெளியானது. தற்போது வெளியாகி உள்ள மனநலம் பாதிக்கப்பட்டு வீடில்லாமல், சாலையில் உலவுவோர் குறை தீர்ப்பது பற்றி வரைவு அறிக்கையும் ஆங்கிலத்தில்தான் வெளியிடப்பட்டது. கோரிக்கை வைத்தபிறகும் கூட தற்போது வரை தமிழில் வெளியாகவில்லை. (வீடில்லாமல், சாலையில் உலவுவோர் குறை தீர்ப்பது பற்றி வரைவு அறிக்கை)
தமிழகத்தில் மக்கள் சார்ந்த கொள்கைகளை வெளியிடுவது வரவேற்கத் தகுந்த விஷயம். ஆனால், இந்தக் கொள்கை அறிவிப்புகள் அரசு நிர்வாக அமைப்புகள் முதலில் ஆங்கிலத்தில் வெளியிடுவதும், மக்கள் அமைப்புகள் கேட்ட பிறகு தமிழில் வெளியிடுவது என்பது ஏற்கதக்கது அல்ல.
எனவே, தமிழ்நாட்டில் வெளியிடப்படும் வரைவு அறிக்கைகள் அனைத்தும் தமிழில்தான் வெளியிட வேண்டும். அதையும் மீறி ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டால் சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஓர் அறிவிப்பை வெளியிட வேண்டும். அனைத்து அரசு துறைகளுக்கும் இதை உத்தரவாக பிறப்பிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
தனது ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வரைவு கொள்கைகள் மட்டுமல்லாமல், அரசின் அனைத்து அரசாணைகளையும் தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT