Published : 21 May 2022 03:43 PM
Last Updated : 21 May 2022 03:43 PM

“ராஜீவ் கொலையாளிகள் விடுதலையை திருவிழாவாக கொண்டாடுவதை பார்க்கையில் ரத்தக் கண்ணீர் வடிகிறது" - கே.எஸ்.அழகிரி

காஞ்சிபுரம்: "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது, எங்களது கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக ஓடியது. ஆனால், அந்தக் கொலையாளிகளின் விடுதலையை திருவிழாவாக கொண்டாடுவதைப் பார்க்கிறபோது, இதயத்தில் இருந்து ரத்தக் கண்ணீர் வடிகிறது" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி கூறியது: "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது, எங்களது கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக ஓடியது. ஆனால், அந்தக் கொலையாளிகளின் விடுதலையை திருவிழாவாக கொண்டாடுவதைப் பார்க்கிறபோது, இதயத்தில் இருந்து ரத்தக் கண்ணீர் வடிகிறது. எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மனிதாபிமானத்தோடு வாழ்வதுதான் மனிதத்தன்மை என்று நாங்கள் கருதுகிறோம். பழிவாங்குவது என்பது மனித தன்மையல்ல. மிருகங்களுக்குக்கூட பழிவாங்குகிற எண்ணம் கிடையாது. ஆனால், இதுபோல ஒரு சிலர் பழிவாங்கும் எண்ணத்தோடு வாழ்ந்து வருகிறார்கள்.

திமுகவுடன் இந்தக் தேர்தல் கூட்டணி வருவதற்கு முன்பே, எங்கள் கூட்டணியில் இருக்கிற அவர்கள் எல்லாம், ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியவர்கள்தான். அது தெரிந்துதானே நாங்களும் அவர்களும் கூட்டணி வைத்துக்கொண்டோம். இன்று அவர்கள் கொள்கையை அவர்கள் கூறுகின்றனர். எங்கள் கொள்கையை நாங்கள் கூறுகின்றோம். அதுதானே தவிர இதற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x