Published : 21 May 2022 03:13 PM
Last Updated : 21 May 2022 03:13 PM

முதியோருக்கு கிண்டி ‘கிங்’ மருத்துவமனை பாதுகாப்பாக இருப்பது சந்தேகம்: ஆய்வுக்குப் பின் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி

சென்னை: கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட் வளாகத்தில கட்டப்பட்டுள்ள முதியோர் மருத்துவமனை கட்டிடத்தின் தரம் குறித்து பொதுப் பணித் துறையை ஆய்வு செய்ய அறிவுறுத்தி உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட் வளாகத்தில கட்டப்பட்டுள்ள முதியோர் மருத்துவமனையை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேசிய முதியோர் மருத்துவமனையொன்று கிண்டியில் 2014 - 2015-ம் நிதியாண்டில் ரூ.151 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்றது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் பணிகள் முடிவுற்றது. இதுகுறித்து ஏற்கெனவே நான் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது நேரமில்லாத நேரத்தில் கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட் வளாகத்தில கட்டப்பட்டுவரும் முதியோர் மருத்துவமனை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்திருக்கின்றனரா எனக் கேட்டேன்.

அதற்கு பதிலளித்தபோது, தரமாக ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது என்று பதிலளித்தனர். அக்கட்டிடப் பணிகள் நிறைவடைந்த நிலையில். 200 படுக்கைகள் கொண்ட இம்மருத்துவமனை 800 படுக்கைகள் கொண்ட கோவிட் மருத்துவமனையாக அன்றைய முதல்வர் அவர்களால் மாற்றப்பட்டது. இம்மருத்துவமனை அவசரக் காலத்தில் கோவிட் மருத்துவமனையாக பயன்பட்டது என்பது உண்மை.

கோவிட் முற்றுக்கு வந்த நிலையில், தேசிய முதியோர் மருத்துவமனையாக மாற்ற முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். இந்த மருத்துவமனை தேசிய முதியோர் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று நேற்றைய முன்தினம் அறிவித்தோம். இந்த மருத்துவமனையை தரைத்தளம் உள்ளிட்ட மூன்று தளங்களிலும் ஆய்வு செய்து, புதியதாக எதையும் சேர்க்க வேண்டுமா என ஆய்வு செய்தோம்.

ஆனால், ஓர் அதிர்ச்சியான தகவல். இந்தக் கட்டிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மருத்துவமனைப் போன்று இல்லை. பல இடங்களில் காரைப் பிய்த்துக்கொண்டு பொள, பொளவெனக் கொட்டிக்கொண்டிருக்கிறது. இது சிமென்ட் பூச்சு போல் இல்லாமல் மண்ணில் பூசப்பட்டது போல் உள்ளது. பத்து நாட்களில் முதியோர் மருத்துவமனையாக அமைத்தால் இம்மருத்துவமனை முதியோருக்கு பாதுகாப்பாக இருக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது.

எனவே, உடனடியாக பொதுப் பணித்துறை தலைமைப் பொறியாளர், கட்டிடத்தின் தொழில்நுட்பக் குழுவினரை வைத்து கட்டிடத் தரத் தன்மை பற்றி ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளோம். காரை பிய்த்துக்கொண்டு கொட்டுவதால் இக்கட்டிடம் எந்த அளவுக்கு பலம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வு செய்து தரத் தன்மைக் குறித்து சான்றிதழ் வழங்கியவுடன் 15 நாட்களுக்குப் பிறகு இந்த மருத்துவமனை திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

இக்கட்டிடப் பணிகளில் முறைக்கேடுகள் நடந்திருக்குமானால், சம்பந்தப்பட்டவர்கள்மீது முதல்வர் வாயிலாக நடவடிக்கைகள் எடுப்பதற்கு வலியுறுத்த இருக்கிறோம். நிச்சயம் கட்டிடம் கட்டியவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x