Published : 21 May 2022 01:27 PM
Last Updated : 21 May 2022 01:27 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்: அண்ணா, கலைஞர், ஸ்டாலினை அடுத்து உதயநிதி வருகிறார். இதை வாரிசு அரசியல் என்று கூற முடியாது. வாரிசாக இருந்தாலும் கட்சியில் கஷ்டப்பட்டுத்தான் மேலேவருகிறார்கள் என்று வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் அய்யாவு பாண்டியன் தலைமை வகித்தார் . இதில் வருவாய்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், ”நகராட்சித் தேர்தலில் நம்மை வெற்றிபெற வைத்த மக்களுக்காக இந்த மண்ணை தொட்டு கும்பிட்டால் ஒவ்வொரு வீட்டையும் தொட்டு கும்பிடுவதை போன்று. நாம் நல்ல பிள்ளையாக நடந்தால் தான் அடுத்து நாடாளுமன்ற தேர்தலில் தேர்தலில் வெற்றி பெறமுடியும்.
இன்னும் 20 ஆண்டுகள் வரை ஸ்டாலின்தான் முதல்வர். திமுகவை எதிர்த்து சண்டை போட ஆள் இல்லை. கலைஞர் இருக்கும்போது அவர் கூறியதை கேட்டோம். அவருக்குப்பின் முதல்வர் ஸ்டாலின் கூறுவதை கேட்கிறோம். அடுத்து ஒரு வாரிசு ரெடியாக உள்ளது. அண்ணா, கலைஞர், ஸ்டாலின், அடுத்து உதயநிதி. இதை வாரிசு அரசியல் என்று கூற முடியாது. வாரிசாக இருந்தாலும் கட்சியில் கஷ்டப்பட்டுத்தான் மேலே வருகிறார்கள். கலைஞர் பள்ளிக்கூடத்தில் பாடம் படித்ததால் தான் திராவிட ஆட்சியை நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின். கலைஞர் பள்ளியில் படித்ததால் நாங்கள் முதல்வர் ஸ்டாலினின் தம்பிகளாக உள்ளோம்.
கடந்த 10 ஆண்டுகளாக கேடுகெட்ட ஆட்சி நடைபெற்றது. நமது ஆட்சி நல்ல ஆட்சி, நல்ல முதல்வர். ஒரு அண்ணனாக, தகப்பனாக குடும்பத்தின் தலைவராக ஸ்டாலின் உள்ளார். அதிமுக ஆட்சியில் கஜானா வை சுரண்டி விட்டார்கள். திமுக வந்து பார்த்த உடன் கஜானாவில் ஒன்றும் இல்லை. வெறும் பெட்டி 1 ரூபாய் காசு கூட இல்லை. பெட்டியைத் திறந்தால் கடன் பேப்பர் மட்டுமே உள்ளது.
டெல்லிக்கு பயப்படாத ஒரு தலைமை நமது தலைமை, எடப்பாடி இங்கே தலையை குணிந்து விடுவார். மோடி முன்பு மாப்பிள்ளை போல் ஸ்டாலின் அமர்கிறார். பாஜக பினாமி ஆட்சியாக அதிமுகவை நடத்தியது” என்று பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT