Published : 21 May 2022 06:14 AM
Last Updated : 21 May 2022 06:14 AM
கோவை: கோவை மாநகரில் தெருநாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்க, சாலைகள், வீதிகளில் திரியும் நாய்களை கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது.
இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கோவை மாநகராட்சியில் சீரநாயக்கன்பாளையம் மற்றும் ஒண்டிப்புதூர் நாய்களுக்கான கருத்தடை அறுவைசிகிச்சை அரங்கத்தில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைசிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த கிழக்கு மண்டலத்தில் வீடற்ற நாய்களின் எண்ணிக்கையை தனியார் தன்னார்வ நிறுவனத்தின் மூலம், 20 முதல் 25 தன்னார்வலர்கள் உதவியுடன் தகுந்த நெறிமுறைகளைப் பின்பற்றி மே 20-ம் தேதி (நேற்று) முதல் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பிறகு அனைத்து நாய்களுக்கும் வெறிநாய் தடுப்பூசி மற்றும் கருத்தடை அறுவைசிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தெருநாய்களின் பாதுகாப்பை மையப்படுத்தி இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் தெரு நாய்கள் அதிகரிப்பதைத் தடுப்பது, வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழப்பது, பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுப்பது முக்கிய நோக்கமாகும். இதற்காக பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தனியார் தன்னார்வ நிறுவனத்தினர் விவரங்களை சேகரிக்கவுள்ளனர். நாள்தோறும் காலை 6 மணி முதல் 9 மணி வரை ஒரு வாரத்துக்கு, இதற்காக நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வலர்கள் இருசக்கர வாகனங்களில் வீதிகள்தோறும் சென்று நாய்களைக் கணக்கெடுக்கவுள்ளனர்.கிழக்கு மண்டலத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்பட்சத்தில் அனைத்து மண்டலங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்” என்றனர்.
தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ‘வஜ்ரா’ தன்னார்வ அமைப்பினரிடம் கேட்டபோது, “ஒரு வார்டுக்கு 2 தன்னார்வலர்கள் வீதம் 10 வார்டுகளில் நேற்று கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இந்த 10 வார்டுகளிலும் தொடர்ந்து 3 நாட்களுக்கு இந்தப் பணி நடைபெறும். தன்னார்வலர்களுக்கு உதவ கோவா மாநிலத்தில் இருந்து 2 பேர் வந்து தங்கி பணி செய்து வருகின்றனர்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT