Published : 21 May 2022 06:06 AM
Last Updated : 21 May 2022 06:06 AM
சென்னை: சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சென்னை நங்கநல்லூரில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் ஒரே கல்லால் செய்யப்பட்ட 32 அடி உயர விஸ்வரூப ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேய சுவாமி அருள்பாலிக்கிறார். இவருக்கு சாற்றப்படும் வடைமாலை விசேஷமானது. இக்கோயிலுக்கு சென்னை மட்டுமின்றி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம்.
இக்கோயிலில், கடந்த 2007-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகள் கடந்த நிலையில், 2019-ல் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா பரவல் காரணமாக நடத்தப்படவில்லை. இந்த நிலையில், சமீபத்தில் இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, கடந்த மாதம் 25-ம் தேதி பாலாலயம் நடைபெற்றது.
திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த 16-ம் தேதி யாக சாலை பூஜைகள் தொடங்கின. லட்சுமி நரசிம்மர், சுதர்சன ஹோமங்களும் நடைபெற்றன. 17-ம் தேதி அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்வு, 19-ம் தேதி புண்யாஹவாசனம், காலசந்தி திருவாராதனம், அதிவாசத்ரய ஹோமம், வேதவிண்ணப்பம், சாற்றுமறை நிகழ்வு ஆகியவை நடைபெற்றன.
நேற்று அதிகாலை 5 மணி அளவில் பிரதான ஹோமம், மகாபூர்ணாஹுதி ஆகியவை நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கோயிலை சுற்றிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று, கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்தனர். சுற்றியிருந்த வீடுகள், கட்டிடங்களின் மொட்டை மாடிகளில் இருந்தும் ஏராளமானோர் தரிசித்தனர். பின்னர், கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, விசேஷ திருவாராதனம், வேத விண்ணப்பம், பிரம்மகோஷம், சாற்றுமறை, மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கும்பாபிஷேகம் நடந்ததை அடுத்து, தொடர்ந்து 45 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடக்க உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT