Published : 20 May 2022 06:45 PM
Last Updated : 20 May 2022 06:45 PM
புதுச்சேரி: "புதுச்சேரியில் விரைவில் அனைத்து வசதிகளுடன் கூடிய திரைப்பட நகரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பூங்காக்களின் சொர்க்கமாக தாவரவியல் பூங்கா ரூ.60 கோடியில் மேம்படுத்தப்படும்" என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
புதுச்சேரியின் சுற்றுலா தலங்களில் ஒன்றான 200 ஆண்டு பழமை வாய்ந்த தாவரவியல் பூங்காவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.60 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ளது. இந்தப் பூங்காவை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று மாலை ஆய்வு செய்தார், மேலும், அமைய உள்ள பல்வேறு வகையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை கூறுகையில், "200 ஆண்டுகள் பழமைவாய்ந்த தாவரவியல் பூங்கா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.60 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது. இதில் மூத்த குடிமக்கள் தங்குவதற்கான இடம், தாய்மார்களுக்கான தனி இடம், பள்ளி மாணவர்களுக்கான இடம், நடைபயிற்சி மேற்கொள்ளும் இடம் போன்றவைகள் மேம்படுத்தப்பட உள்ளது. குழந்தைகள் விளையாடும் நீர் விளையாட்டு ஏற்படுத்த ஆலோசிக்கிறோம். தாவரவியல் பூங்காவில் திரைப்படம் எடுக்க தேவையான நடவடிக்கையும் எடுக்கிறோம்.
மேலும் சிறுவர்கள் ரயில், சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிவறை வசதிகள், உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்காவை சுற்றிப் பார்க்க பேட்டரி கார் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. பூங்காவில் உள்ள பாரத மாதா சிலை பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். மீன் காட்சியகம் சீரமைக்கப்படும். தாவரவியல் பூங்காவானது, பூங்காக்களின் சொர்க்கமாக மாற்றப்படும்.
புதுச்சேரியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் வகையில் சினிமா பிரபலங்களில் கோரிக்கைகளை ஏற்று சவுண்ட் தியேட்டர், ரெக்கார்டிங் உள்ளிட்ட வசதிகளுடன் ஒரு முழுமையான திரைப்பட நகரம் புதுச்சேரியில் உருவாக்கப்படும்.
நிறுத்தப்பட்ட மலர் கண்காட்சி மீண்டும் நடத்தப்படும் மேலும் மாடித் தோட்டம் வீட்டுத் தோட்டம் மற்றும் தோட்டக்கலையை ஊக்குவிக்கும் வகையில் தோட்ட திருவிழா நடத்தப்படும்'' என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து சிறுவர்களுடன் சிறுவர் ரயிலில் சென்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை, தாவரவியல் பூங்காவை சுற்றிப் பார்த்தார். அதைத்தொடர்ந்து அருகிலுள்ள வனம் மற்றும் வனவிலங்குத் துறையையும் ஆய்வு செய்தார். அங்கு பராமரிப்பில் உள்ள வனவிலங்குகள், பறவைகளைப் பார்த்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT